வீட்டிலிருந்து பணி செய்பவரா நீங்கள்? – உங்கள் பணி உயர்வுக்கு இதை செய்யுங்கள்
செவ்வாய், 13 அக்டோபர் 2020 (10:45 IST)
இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலகம் முழுவதும் பலர் வீட்டிலிருந்தே பணிபுரியும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், நீங்கள் அலுவலகத்திற்கு நாள்தோறும் செல்லாமல் எவ்வாறு உங்களுக்கு பணி உயர்வு கிடைக்கும் என நினைத்ததுண்டா?
அங்குதான் உங்களின் மின்னஞ்சல்கள் பெரும் பங்கை ஆற்றுகின்றன. ஆம் நீங்கள் உங்கள் மின்னஞ்சலை வடிவமைப்பதை ஒரு கலை போல செய்ய வேண்டும். அதுவே உங்களின் உயர் அதிகாரியை உங்களை நோக்கி கவனிக்க வைக்கும்.
சரி இதுகுறித்து சற்று விரிவாக பார்ப்போம்.
நீங்கள் வீட்டிலிருந்து பணிபுரியும்போது மின்னஞ்சல் அனுப்பினால் சுருக்கமாக என்ன சொல்ல வருகிறீர்களோ, அதை மட்டும் சொல்லாமல் சொல்லவரும் விஷயத்தில் உங்களுக்கு ஒரு தெளிவான அறிவு உள்ளது என்பதை போல நீங்கள் காட்டிக் கொள்ள வேண்டும்.
ஆனால், அதே சமயம் நீங்கள் தேவையில்லாமல் அதிகமாக `ஷோ ஆஃப்` செய்கிறீர்கள் என்பதுபோல உங்கள் உயர் அதிகாரி உணராமல் பார்த்து கொள்ளுங்கள்.
உங்கள் உயர் அதிகாரிகளிடமிருந்து மின்னஞ்சல் வந்தால், அவர்கள் அதை எந்த மாதிரியான மனநிலையில் எழுதி உள்ளனர் என்பதை பயன்படுத்தியிருக்கும் வார்த்தையை வைத்து கண்டறியுங்கள். அதேபோல ’ஜூம் அல்லது ஸ்கைப்’ கால்களிலும் அவர்களின் மொழியை கவனியுங்கள்.
நீங்கள் வீட்டிலேயே பணிபுரியும் சமயம் உங்களின் சக பணியாளர் அலுவலகத்திற்கு சென்று பணிபுரியும் சூழலும் இருக்கலாம். எனவே நீங்கள் அரிதாகவே உங்கள் உயர் அதிகாரியை பார்க்கும்பட்சத்தில் நீங்கள் சற்று கடினமாகத்தான் உழைக்க வேண்டும்.
அதேபோல உயர் அதிகாரியை மட்டுமல்ல, உங்களுடன் பழகுபவர்களையும் உங்கள் வசம் ஈர்க்க நீங்கள் செய்ய வேண்டிய மூன்று விஷயங்கள், சிரித்த முகம், மரியாதையான பேச்சு, இனிமையான சொற்கள்.
இது அனைத்தையும் தாண்டி உங்களுக்கு ஒரு விஷயம் வேண்டும் என்றால் அது குறித்து நீங்கள் பேச வேண்டும். எந்த ஒரு விஷயமும் பேசப்படாமல் தீர்க்கப்படாது.
நீங்கள் அலுவலகத்தில் உங்கள் உயர் அதிகாரிகளின் கண் முன்னே பணிபுரியும்போது, நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்கள் என்பது அவருக்கு தெரியும்.
ஆனால் நீங்கள் வீட்டிலிருந்து பணிபுரியும்போது, சில சமயம் நீங்கள் உங்கள் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருக்கிறீர்களோ, சமையல் செய்து கொண்டிருக்கிறீர்களோ அல்லது பிற வேலைகளில் ஈடுபட்டுள்ளீரோ என அவர்களுக்கு அச்சம் எழுவதை நிச்சயம் அவர்களால் தவிர்க்க முடியாது.
எனவேதான் வீட்டிலிருந்து பணிபுரியும் ஒரு ஊழியர் தனது உயர் அதிகாரியுடன் அடிக்கடி பேச வேண்டும் என்கிறார் ’தி ஒர்க் ஃபவுண்டேஷன்’ என்னும் ஆய்வுக் கழகத்தின் மூத்த கொள்கை ஆலோசகர் மேலானி வில்கிஸ்.
"இந்த பெருந்தொற்று காலத்தில் பலர் முன்பைக் காட்டிலும் அதிக பொறுப்புகளை எடுத்து கொண்டுள்ளனர். ஆனால் அவர்கள் அதை தங்கள் உயர் அதிகாரிகளுக்கு தெரியும்படி செய்ய வேண்டும் என்றே நாங்கள் கூறுகிறோம். அது மின்ன்ஞ்சல் மூலமாக கூட இருக்கலாம்," என்கிறார் அவர்.
மேலும் முந்தைய காலங்களை போலவே உங்கள் பணியை பகுப்பாய்வு செய்யும் ஆலோசனை கூட்டம் உங்களின் உயர் அதிகாரிகளுடன் நடப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். இதன்மூலம் உங்கள் உயர் அதிகாரிகளுக்கும் நீங்கள் செய்தது, செய்யப்போகும் பணி குறித்து ஒரு தெளிவு கிடைக்கும். அதுவே உங்கள் பணி உயர்வுக்கு உதவும்.
இந்த பெருந்தொற்று காலத்தில் ஒரு நிறுவனம் வெற்றி பெற வேண்டும் என்றால் சூழலுக்கு தகுந்தாற் போல தன்னை மாற்றிக் கொள்ளும் ஊழியரும், புதிய யோசனைகளை முன் வைக்கும் ஊழியர்களுமே தேவை. எனவே புதிய யோசனைகளை முடிந்தவரை முன் வையுங்கள் என்கிறார் உளவியல் பேராசிரியர் ஷேரான் க்லேர்க்.
இது அனைத்தும் ஊழியர்களுக்கு என்றால் உயர் அதிகாரிகளுக்கும் சில பொறுப்புகள் உண்டு. உயர் அதிகாரிகள் எந்த ஊழியர் எவ்வளவு நேரம் எந்த பணியை செய்கிறார் என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆக்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் சட்டம் மற்றும் பொதுக் கொள்கை பேராசிரியர், ஆனி டேவிஸ், வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்கள் குறித்து உயர் அதிகாரிகள் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்கிறார்.
"உங்கள் குழுவில் வீட்டிலிருந்து பணிபுரிபவர்கள் இருந்தால் நீங்கள் எவ்வாறு அவர்களின் பணிகளை மதிப்பிடப் போகிறீர்கள் என்பது குறித்த தெளிவு வேண்டும். மேலும் பணி உயர்வுகள் எவ்வாறு இருக்கும் என்பதையும் விளக்க வேண்டும்," என உயர் அதிகாரிகளுக்கான தனது அறிவுரையை தருகிறார் ஆனி.
மேலும் தங்கள் பணிக்கு உண்மையாக செயல்படுபவர்கள் யார், யார் உறுதியாக தங்கள் நேரத்தை தருகிறார்கள், எந்த சூழலில் யார் புதுமையான யோசனைகளை முன் வைக்கிறார்கள் என்பதை உயர் அதிகாரிகள் தெரிந்து கொள்ள வழக்கத்தைவிட சற்று கூடுதலான உழைப்பை தந்துதான் ஆக வேண்டும் என்கிறார் ஆனி.