உத்தர பிரதேசம், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியமைக்க உள்ளது. தேர்தல் வெற்றியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகமான கமலாலயத்தில் நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கி வியாழக்கிழமை கொண்டாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "பாஜகவுக்கு மாற்று சக்தி எதுவும் இல்லை என்பது மீண்டும் ஐந்து மாநிலத் தேர்தலின் மூலம் தெரிய வந்துள்ளது. பிரதமர் மோதியுடன் தான் பயணிப்போம் என்று ஒருமித்த குரலில் மக்கள் தமது கருத்தைத் தெரிவித்துள்ளனர்.
உத்தராகண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்கப் போவதுபோல் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வந்தனர். ஆனால், மக்கள் தீர்ப்பு பாஜகவுக்கு ஆதரவாகவே வந்துள்ளது. மணிப்பூரில் 2012 இல் பாஜகவுக்கு எந்த இடமும் கிடைக்கவில்லை. 2017 இல் 21 இடங்களைப் பிடித்தோம். தற்போது தனிப்பெரும்பான்மையுடன் அந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க உள்ளோம்.
மணிப்பூர் மாநிலத்தைப் பொருத்தவரை 52 சதவீதம் சிறுபான்மை சமூகத்தினர் ஆவர். அங்கு பாஜக ஆட்சி வந்துள்ளது என்றால் அது சரித்திர சாதனை. கோவாவிலும் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் பாஜகவுக்கு ஆதரவளித்துள்ளனர். இது தமிழகத்திலும் நிகழும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது. அது 2024-ம் ஆண்டிலா அல்லது 2026-ம் ஆண்டிலா என்பது தெரியாது.