60 ஆண்டு காத்திருந்து ஜெஃப் பெசோஸ் விருந்தினராக விண்வெளி செல்லும் அமெரிக்கப் பெண் வேலி ஃபங்க்
செவ்வாய், 6 ஜூலை 2021 (13:29 IST)
ஒருவர் தன் கனவை நனவாக்க எத்தனை ஆண்டு காலம் காத்திருக்கலாம்? இரண்டு ஆண்டுகள், ஐந்து ஆண்டுகள், பத்து ஆண்டுகள்? இங்கு ஒரு பெண் சுமார் 60 ஆண்டுகளாக தன் கனவு மெய்ப்பட காத்திருந்தார். அவர் பெயர் வேலி ஃபங்க்.
அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்தில் 1939ல் பிறந்த இவர் பறப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இதுவரை 19,600 மணி நேரம் விமானத்தில் பறந்திருப்பதாக என மிக பெருமையாக கூறுகிறார். மேலும் சுமார் 3,000 பேருக்கு பறக்க பயிற்றுவித்துள்ளார்.
ஆண்கள் மட்டுமே கோலோச்சிய பல இடங்களில், பெண்களுக்கு இருந்த தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து முதல் பெண்ணாக நுழைந்து, தனக்கு பின்னால் வரவிருக்கும் பெண்களுக்கு வழி வகுத்துக் கொடுத்திருக்கிறார்.
நேஷனல் டிரான்ஸ்போர்ட் சேஃப்டி போர்ட் என்கிற அமைப்பில் முதல் பெண் விமான பாதுகாப்பு ஆய்வாளராக பணி புரிந்திருக்கிறார். அதே போல அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பின் முதல் பெண் ஆய்வாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.
பெண் என்பதால் மறுப்பு
சரி விஷயத்துக்கு வருவோம். இவர் கடந்த 1961ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா நடத்திய விண்வெளி வீரர்களுக்கான மிக கடுமையான உடல், மனத் தேர்வுகளில் பங்கெடுத்து சிறப்பாக செயல்பட்டார்.
ஆனால் போதிய விளக்கங்கள் கொடுக்கப்படாமல் தடாலடியாக, அத்திட்டம் நிறுத்தப்பட்டது. வேலி ஃபங்குடன் பங்கெடுத்த பெண்கள் யாருமே நாசாவால் விண்ணுக்கு அனுப்பப்படவில்லை.
அவர் பெண் என்கிற ஒரே காரணத்தால் விண்ணுக்கு அனுப்பபடவில்லை என தி இந்து பத்திரிகை ஒரு கட்டுரையில் குறிப்பிட்டது.
இருப்பினும் வேலி ஃபங்குக்கு விண்ணுக்குச் செல்லும் கனவுத் தாகம் நீங்கவில்லை. நாசா போன்ற அமைப்புகள் மூலம் செல்ல முடியவில்லை என்றால் என்ன? தனியாகச் செல்லலாமே என தீர்மானித்தார்.
சொந்த செலவில் விண்வெளிப் பயணம்
கடந்த 2010ஆம் ஆண்டு ரிச்சர்ட் பிரான்சனின் வெர்ஜின் கேலக்டிக் திட்டத்தில் விண்வெளிக்குச் செல்ல ஒரு டிக்கெட்டுக்கு இரண்டு லட்சம் டாலரை செலவழித்தார். சமீபத்தில் தான் இந்த திட்டத்துக்கு அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பின் இசைவு கிடைத்தது.
ஆனால் சமீபத்தில், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோசின் விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின், தன் சிறப்பு கெளரவ விருந்தினராக வேலி ஃபங்கை விண்ணுக்கு அழைத்துச் செல்ல இருப்பதாகக் கூறியுள்ளது.
ஜெஃப் பெசோஸ், அவரது சகோதரர் மார்க், 28 மில்லியன் அமெரிக்க டாலர் செலுத்தி இருக்கும் பெயர் தெரியாத மனிதர் ஆகியோருடன், 60 ஆண்டு காலம் விண்ணுக்குச் செல்ல காத்திருந்த வேலி ஃபங்கும் அந்த விண்வெளிப் பயணத்தில் கலந்து கொள்ளப் போகிறார்.
அன்று பெண் என்பதல் விண்ணுக்குச் செல்ல முடியாமல் தவித்தவர், இன்று உலகின் நம்பர் 1 பணக்காரரின் கெளரவ விருந்தினராக விண்ணுக்குச் செல்கிறார்.
பயணத் திட்டம் என்ன?
புவியில் இருந்து 100 கிலோமீட்டர் உயரத்துக்கு ராக்கெட்டை செலுத்தப் போகிறார்கள். இத்தனை உயரத்தில் பறக்கும் போது மைக்ரோ கிராவிட்டி என்கிற உடல் எடையற்ற, புவியீர்ப்பு விசையற்ற நிலையை பயணிகளால் உணர முடியும்.
பிறகு பாராசூட்களைப் பயன்படுத்தி இவர்கள் பயணிக்கும் கேப்சூல் தரையிறங்கும்.
அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 2000ஆம் ஆண்டு ப்ளூ ஆரிஜின் என்னும் நிறுவனத்தை நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.