ஜெயம் ரவியின் 'அகிலன்' ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? - சினிமா விமர்சனம்!

சனி, 11 மார்ச் 2023 (08:29 IST)
ஜெயம் ரவியை வைத்து 'பூலோகம்' படத்தை இயக்கியிருந்த என்.கல்யாண கிருஷ்ணன், மீண்டும் அவருடன் இணைந்துள்ள திரைப்படம்தான் 'அகிலன்'. ப்ரியா பவானிசங்கர், தன்யா ரவிச்சந்திரன், தருண் அரோரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு: விவேக் ஆனந்த், இசை: சாம் சி.எஸ்.
 
தனது முதல் படமான பூலோகத்தில் , வட சென்னையை கதைக்களமாகவும் குத்துச்சண்டையை கருப்பொருளாகவும் வைத்திருந்த இயக்குநர் என்.கல்யாண கிருஷ்ணன், இந்த படத்தில் துறைமுகம் மற்றும் அதை சுற்றி நிகழும் சம்பவங்களை திரைப்படமாக வடிவமைத்துள்ளார்.
 
'சர்வதேச சந்தையை கடல்வழி போக்குவரத்துதான் நிர்ணயம் செய்கிறது' என்று கடந்த வாரம் வெளியான அகிலன் திரைப்படத்தின் ட்ரெய்லரில் ஒரு வசனம் இடம்பெற்றிருந்தது. எனவே, புதுவிதமான கதைக்களத்தை இப்படம் கொண்டிருக்கும் என்ற தோற்றம் ஏற்பட்டது.
 
இதேபோல், ஜெயம் ரவி நெகடிவ் ரோலில் நடிப்பதுபோன்ற தோற்றத்தையும் ட்ரெய்லர் ஏற்படுத்தியது. இதனால் அகிலன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்துள்ளதா? அகிலன் திரைப்படம் தொடர்பாக தற்போது ஊடகங்களில் விமர்சனம் வெளியாகி வருகிறது.
 
வழக்கமான படம்தான்!
 
கதை முழுக்கவே ’அகிலன்’ என்ற கதாநாயக பிம்பத்தை சுற்றியே கட்டமைத்திருக்கிறார்கள். முதல் பாதி தீவிரமாக நகர்ந்து கதைக்கான சுவாரஸ்யத்தைக் கூட்டினாலும், இரண்டாம் பாதி தெரிந்த முடிவுதானே என்ற ஊகத்தையும் படம் எப்போது முடியும் என்ற எண்ணத்தையுமே ஏற்படுத்துகிறது என்று இந்து தமிழ்திசை விமர்சனம் கூறுகிறது.
 
அகிலனாக உடம்பை ஏற்றி இருப்பது, கட்டுப்படுத்திக்கொள்ளும் கோபம், அடுத்தவர்களை உசுப்பேற்றி காரியம் சாதிப்பது, வசன உச்சரிப்பு, கோபம், அழுகை என படம் தொடங்கியதில் இருந்து முடிவு வரை தனது சிறப்பான நடிப்பை ஜெயம் ரவி கொடுத்திருக்கிறார்.
 
ப்ரியா பவானி ஷங்கர், தான்யா என கதாநாயகிகளுக்கு கதையில் பெரிதாக வேலை இல்லை என்றாலும் வரும் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார்கள்.
 
விவேக் ஆனந்த் சந்தோஷத்தின் ஒளிப்பதிவில் ஹார்பர் களமும் கடலும் திரையில் புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. சுற்றி வளைக்காமல் முதல் காட்சியில் இருந்தே கதையின் நோக்கமும் தீவிரமும் தொடங்குவதால், அதற்கேற்ற இசையை பின்னணியில் பல இடங்களில் தீவிரமாக கொடுத்திருக்கிறார் சாம் சி.எஸ். பாடல்களும் கதையோட்டத்தில் அமைந்திருப்பதால் அதிலும் இசையில் அதிரடி காட்டி இருக்கிறார்.
 
முதல் பாதிக்காகவும், காட்சி அனுபவத்திற்காகவும் ஒருமுறை ‘அகிலன்’ திரைப்படத்தை திரையரங்குகளில் பார்க்கலாம்` என்றும் இந்துதமிழ்திசை விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
குழப்பங்களால் அகிலன் தடுமாறி நிற்பதாக தினமணி விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
`ஆஸ்திரேலியா தப்பிச் செல்ல முயன்ற அகதி மக்கள் ஒரு சிறுதீவில் சிக்கிக் கொள்கின்றனர். அவர்கள் கொண்டு வந்த உணவுப் பொருள்கள் காலியாக பசியால் தவிக்கின்றனர்.
அவர்களுக்கு உதவப் போய் போதை கும்பலில் சிக்கிக் கொள்கிறார் நடிகர் அகிலனின் (ஜெயம்ரவி) அப்பா. அவரைப் போலவே பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்டவிரோத கடத்தல் மூலம் கடல் வழியாக உதவ போராடுகிறார் அகிலன்.
 
அவர் தனது நோக்கத்தில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதே அகிலனின் கதை. படத்தில் நாயகனாக மிடுக்காக இருக்கிறார் நடிகர் ஜெயம்ரவி. சில இடங்களில் பூலோகம் ஜெயம் ரவியாகவே தெரிகிறார். படம் முழுக்க அவரை சுற்றியே நடக்கிறது.
 
தனது முந்தைய படங்களைப் போலவே ஆக்ரோஷமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் ஜெயம் ரவி. நல்ல கதை, சொல்ல விரும்பும் கருத்து முக்கியமானது என்றாலும் அதனை ரசிகர்களுக்கு புரியும் வகையில் திரைக்கதையை உருவாக்கியிருக்கலாம்.
 
தொழில்நுட்ப ரீதியாக பாடல்களும், பின்னணி இசையும்கூட பெரிதாக கைகொடுக்கவில்லை என்றும் விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
முதல் பகுதியில் ஏற்படுத்திய எதிர்பார்ப்புகளை படத்தின் இரண்டாம் பாதி பூர்த்தி செய்ய தவறிவிட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம் கூறியுள்ளது.
 
`இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் படத்தின் தொடக்கத்தில் சுவாரஸ்யமான காட்சிகளுடன் துறைமுக வாழ்க்கையை நம்ப வைக்கிறார்.
 
துரதிருஷ்டவசமாக, அகிலனின் தனிப்பட்ட முன்கதை, நோக்கங்கள் அறிமுகப்படுத்தப்படும்போது அவை வீழ்ச்சியடைகின்றன.
 
அடுத்து வரும் காட்சிகள், அடுத்து என்ன நடக்கும் என்பதை எளிதாக ஊகிக்கும்படி உள்ளன.
 
ப்ரியா பவானி சங்கரின் பாத்திரத்திற்கு அதிக பங்களிப்பு இல்லாதபோதும் அவர் கவனிக்க வைக்கிறார்.
 
"ஜெயம் ரவி ஒற்றை ஆளாக படத்தை தோளில் தூக்கி சுமக்கிறார்" என்று விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
குருவை போல சிஷ்யன்
மங்காத்தா திரைப்படத்திற்கு பின்னர் தமிழில் நெகட்டிவ் ஹீரோ கதையம்சம் உள்ள படங்கள் நிறைய வரத் தொடங்கிவிட்டதாவும் அத்தகைய படங்களில் ஒன்றுதான் அகிலன் என்றும் இந்தியன் எஸ்பிரஸ் விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
பணத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் எதையும் செய்யும் நபராக ஜெயம் ரவி வருகிறார். அகிலன் கொடூரமானவன் என்றும் தன்னை பற்றி மட்டுமே அக்கறை கொள்ளும் நபர் என்ற தோற்றத்தையும் படத்தின் முதல் பாதி கொடுக்கிறது.
 
ஆனால், இரண்டாம் பாதியிலோ வழக்கம் போல் அவர் நல்லது செய்வதற்காகவே குற்றங்களை செய்கிறார் என்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தனது குருநாதரான இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் போன்று, இடதுசாரி சிந்தனையுள்ள படத்தை கல்யாண கிருஷ்ணன் கொடுக்க முயன்றுள்ளார்.
 
எஸ்.பி. ஜனநாதன், திரைப்படத்தை தனது கம்யூனிஸ சித்தாந்த கருவியாக மட்டுமே பயன்படுத்துவார்.ஆனால், கல்யாண கிருஷ்ணன், ரசிகர்களையும் மகிழ்விக்க முயன்றுள்ளார். எனினும், அது எடுபடவில்லை` என்று இந்தியன் எஸ்பிரஸ் விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்