தேர்தல்களில் முறைகேடு - தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் அதிமுக தலைவர்கள் புகார்

புதன், 20 அக்டோபர் 2021 (13:30 IST)
தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த ஒன்பது மாவட்ட உள்ளாட்சி தேர்தல்களில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தலைவர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

 
இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் ஆளும் திமுக அரசு, முறைகேடு செய்து வெற்றி பெற்ற பலரை தோல்வி அடைந்தவர்களாக ஆக்கியுள்ளது. ஆளும் அரசின் கைப்பாவையாக மாநில தேர்தல் ஆணையமும் மாவட்ட நிர்வாகமும் செயல்பட்டுள்ளன," என்று கூறினார்.
 
"உதாரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் 4,000க்கும் அதிகமான வாக்குகள் வெற்றி பெற்ற சூழலில் அதை அறிவிக்க தாமதம் செய்ததால் அது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க சென்றார். ஆனால், ஆறு மணி நேரத்துக்குப் பிறகே அறிவிப்பு வெளிவந்தது."
 
"ஆனால், திமுகவினர் வெற்றி பெற்றால் அது பற்றிய அறிவிப்பு உடனுக்குடன் வெளியிடப்பட்டது. திருப்பத்தூர் வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதியில் ஆலங்காயம் என்ற தொகுதியில் ஆளும் கட்சி எம்எல்ஏ வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்குப்பெட்டியை எடுத்ததாக செய்திகள் கூட வெளியிடப்பட்டன. ஆனால், அதில் எடுக்கப்பட்ட மேல் நடவடிக்கை என்ன என்பது தெரியவில்லை "
 
"பல இடங்களில் தேர்தல் முறைகேடுகள் நடந்துள்ளன. அது பற்றி விவரங்களை ஆளுநரிடம் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளோம். இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரை கேட்டுக் கொண்டுள்ளோம்."
 
"இப்படிப்பட்ட முறைகேடுகள் நடக்கலாம் என்பதால்தான் நாங்கள் முதலிலேயே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அதன்பேரில் முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும், இந்த தேர்தல் இந்திய ஜனநாயகத்தில் முன்னுதாரணமாக இருக்க வேண்டும், வாக்குச்சாவடியில் சிசிடிவி கேமிரா பொருத்தப்பட வேண்டும் போன்ற பல உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்தது. ஆனால், அதை சரிவர அரசு பின்பற்றவில்லை."
 
"அதிமுக ஆட்சியின்போது இதேதேர்தலை நடத்த எங்களுடைய அரசு தயாராக இருந்தது. ஆனால், அப்போது நீதி்மன்றத்தை அணுகி தடையைப் பெற்றது திமுக என்பதை நினைவில் கொள்ள வேண்டும்," என்றார் எடப்பாடி பழனிசாமி.
 
"தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்தும் ஆளுநரிடம் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சரின் உதவியாளர் அனுமதியில்லாத பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரை எடுக்குமாறு போக்குவரத்து காவலர் ஒருவர் கூறுகிறார். அந்த காவலரை, காரில் இருந்த அமைச்சரின் உதவியாளர் கன்னத்தில் அறைகிறார். அந்த சம்பவம் பொதுமக்கள் முன்னிலையிலேயே நடக்கிறது.

தனக்கு நேர்ந்த சம்பவத்தை புகாராக அந்த காவலர் அளிக்கிறார். ஆனால், அமைச்சரின் உதவியாளர் அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டியதால் அந்த காவலர் பிறகு புகாரை திரும்பப் பெறுகிறார். இப்படிப்பட்ட நிர்வாகம்தான் இங்கே நடக்கிறது," என்றார் எடப்பாடி பழனிசாமி.
 
திமுக அமைச்சர்கள் மீதான பழைய வழக்குகள் மீதான மக்கள் கவனத்தை திசை திருப்பவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது என்று கேள்வியொன்றுக்கு பதிலளித்த பழனிசாமி கூறினார்.
 
சசிகலாவின் அரசியல் மறுபிரவேசம் குறித்து கேட்டதற்கு, "சசிகலா எதை சொன்னாலும் எங்களுக்கு கவலை இல்லை. அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் கட்சியில் உறுப்பினரே இல்லை. தேர்தல் ஆணையமும் உச்சநீதிமன்றமும் அதிமுகவின் இன்றைய நிலையை உறுதி செய்துள்ளன," என்றார் எடப்பாடி பழனிசாமி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்