சந்திரயான் 2: வைரலான விக்ரம் லேண்டரின் படத்தின் உண்மைத்தன்மை என்ன?

Arun Prasath

புதன், 11 செப்டம்பர் 2019 (16:58 IST)
சந்திரனின் மேற்பரப்பில் எடுக்கப்பட்டதாக ஒரு புகைப்படம் 'விக்ரம் லேண்டர்' என பெயரிட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.

வைரலான இந்த படத்தைத்தான் ஆர்பிட்டர் எடுத்ததாக விக்ரம் லேண்டரின் தெர்மல் இமேஜ் என சிலர் சமூக ஊடகங்களில் கூறி வருகின்றனர்.
47 நாட்கள் பயணத்திற்கு பிறகு செப்டம்பர் 7ஆம் தேதி அதிகாலை 1:30 - 2:30 மணியளவில் சந்திரயான் 2 திட்டத்தின் அதிமுக்கிய நிகழ்வான லேண்டர் தரையிறக்கம் நடைபெறும் என்று இஸ்ரோ அறிவித்திருந்த நிலையில், நிலவின் மேற்பரப்புக்கு 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபோது இஸ்ரோவுடன் லேண்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
 

செவ்வாய்கிழமையன்று காலையில், தனது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து இது குறித்து கருத்து வெளியிட்ட இஸ்ரோ அமைப்பு, ''சந்திரயான் 2-ன் ஆர்பிட்டர் விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துள்ளது. ஆனால் அதனுடன் இன்னமும் தொடர்பு ஏற்படுத்தப்படவில்லை. விக்ரம் லேண்டருடன் தகவல்தொடர்பை ஏற்படுத்த அனைத்து சாத்தியமான வழிகளும் தற்போது செயப்பாட்டு வருகிறது'' என்று குறிப்பிட்டிருந்தது.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமையன்று, நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

சுற்றுவட்டக் கலன் (ஆர்பிட்டர்) விக்ரம் லேண்டரின் படத்தை எடுத்து அனுப்பியுள்ளதாகவும் சிவன் தெரிவித்தார்.

ஆனால், சமூகவலைத்தளங்களில் 'விக்ரம் லேண்டர்' என பெயரிட்டு பகிரப்பட்ட படங்கள் தவறான தகவலை தருவதாக உள்ளது.

தனது அதிகாரபூர்வ வலைத்தளம், ட்விட்டர் மற்றும் பேஸ்புக் கணக்கு என்று எதிலும் விக்ரம் லேண்டரின் படம் என்று எதனையும் இஸ்ரோ வெளியிடவில்லை.

வைரலான புகைப்படத்தின் உண்மைத்தன்மை என்ன?

சமூகவலைதளத்தில் பகிரப்பட்ட இந்த புகைப்படத்தை கூகுளில் 'ரிவர்ஸ் இமேஜ் தேடல்' ஆய்வு செய்தால், அது அமெரிக்க விண்வெளி முகமையான நாசாவின் அப்பல்லோ-16 திட்டம் தொடர்புடைய படம் என்று தெரிய வருகிறது.
2019 ஜூன் 19-ஆம் தேதியன்று, தனது அதிகாரபூர்வ வலைதளத்தில் நாசா வெளியிட்ட ஒரு கட்டுரையில் இந்த படம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
 

அப்பல்லோ-16 திட்டம் தொடர்புடைய படம் என்று அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், சமூகவலைதளத்தில் இது போன்ற படங்கள் விக்ரம் லேண்டரின் தெர்மல் இமேஜ் என பகிரப்பட்டு வருகின்றன.

மேலும் கடந்த சில நாட்களில் சமூகவலைதளத்தில் குறிப்பாக ட்விட்டரில் இஸ்ரோ தலைவர் சிவன் பெயரில் பல போலி கணக்குகள் உருவாக்கப்பட்டு அவை பல்வேறு கருத்துக்களை வெளியிட்டன.
 

இந்த சமூகவலைதள கணக்குகள் போலியானாவை என்று ஏற்கனவே இஸ்ரோ விளக்கமளித்துள்ளது.

இஸ்ரோவின் அதிகாரபூர்வ வலைதளத்தில் வெளியான அண்மைய தகவலின்படி, இஸ்ரோ தலைவர் சிவனுக்கு சமூக வலைதளத்தில் தனிப்பட்ட கணக்கு எதுவும் இல்லை என்றும் இவற்றை நம்பவேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்