பிரபஞ்சம் குறித்து இன்னும் விலகாத 5 பெரிய மர்மங்கள்!

புதன், 16 நவம்பர் 2022 (13:10 IST)
நமது பிரபஞ்சம் மர்மங்களால் நிறைந்தது. மற்றொரு வார்த்தையில் கூறுவதென்றால் பல மர்மங்களின் தொகுப்புதான் நம்முடைய பிரபஞ்சம்.

நாம் எவ்வளவு அதிகமாக கற்றுக்கொள்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நமக்குத் தெரியாதவை நிறைய உள்ளன என்பதை உணர்கிறோம். நம் பிரபஞ்சம் குறித்து பல மர்மங்கள் இருக்கும் நிலையில், அதில் 5 பெரிய மர்மங்களை இங்கு காணலாம்.

பிரபஞ்சம் ஒன்று மட்டுமே உள்ளதா?
நம் பிரபஞ்சம் தனித்துவமானது என்று நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை. நம் பிரபஞ்சம் உருவாக்கப்பட்டதைப் போல, பல பிரபஞ்சங்கள் உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன. அப்படி என்றால், நாம் ஒரு பிரபஞ்சத்தில் அல்ல, பல பிரபஞ்சங்களின் பரந்த தொகுப்பில் வாழ்கிறோம்.

இதைத் தான் இயற்பியலாளர்கள் ‘மல்டி-யுனிவர்ஸ்’ என்று குறிப்பிடுகின்றனர். ஒவ்வொன்றும் தனித்தன்மையுடன் மற்றும் சொந்த இயற்பியல் விதிகளுடன் கூடிய தனித்தனி பிரபஞ்சம் என்று நாம் நினைக்கலாம். உதாரணமாக, நம் பிரபஞ்சத்தில் உள்ள ஈர்ப்பு விசையை விட 100 மடங்கு வலிமையான ஈர்ப்பு விசையை ஏதேனும் ஒரு பிரபஞ்சம் கொண்டிருக்கலாம். பல பிரபஞ்சங்களின் இருப்பை நம்மால் நிரூபிக்க முடிந்தால், பிரபஞ்சம் தொடர்பான நம் சிந்தனையில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய உண்மையான அறிவுப் புரட்சியாக அது இருக்கும்.

கரும் பொருள் உண்மையா?
பிரபஞ்சத்தின் இருண்ட பக்கம் பெரும் மர்மமானது. இந்தப் பிரபஞ்சத்தின் மொத்த அளவில் 96 சதவிகிதத்தை கரும் பொருள் மற்றும் கருப்பு ஆற்றல் (dark matter and dark energy) நிரப்புகின்றன.

நீங்கள், நான், சூரியன், பூமி, விண்மீன்கள் மற்றும் பால்வெளி ஆகியவை இணைந்து மீதமுள்ள 4 சதவிகித இடத்தை நிரப்புகிறோம். கரும்பொருள் என்பது பெருவெடிப்பு (big bang) கோட்பாட்டின் அடிப்படையில் நம் பிரபஞ்சம் உருவான பிறகு ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் அடிப்படைத் துகள்களால் உருவானது. ஆனால், இது மர்மமான ஒன்று. இது இருப்பதற்கான ஆதாரங்கள் நம்மிடம் இருந்தாலும், துரதிர்ஷ்டவசமாக அது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

வெண்துளைகள் உள்ளனவா?

கருந்துளைகள் பற்றி நாம் பலரும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், வெண்துளைகள் பற்றி சிலரே கேள்விப்பட்டுள்ளனர். வெண்துளைகள் கருந்துளைகளுக்கு எதிரான பண்பு கொண்டவை.

கருந்துளைகள் அனைத்தையும் உள்ளிழுக்கும். வெண்துளைகள் அனைத்தையும் வெளித்தள்ளும். கருந்துளைகளில் இருந்து எதுவும் வெளியேற முடியாது. வெண்துளைகளுக்குள் எதுவும் உள்ளே செல்ல முடியாது.

வெண்துளைகள் உள்ளனவா இல்லையா என்பது குறித்து பல விவாதங்கள் நடந்துவருகின்றன. அவை இருந்தால், நிச்சயம் சுவாரஸ்யமான ஒன்றாக இருக்கும். மேலும், அவை மற்ற பிரபஞ்சங்களுக்கு அல்லது நம் பிரபஞ்சத்தின் பிற சகாப்தங்களோடு நம்மை இணைக்கும் பாதையாக செயல்படுவதற்கான வாய்ப்பையும் உருவாக்கலாம். ஆனால், அவை கற்பனையான ஒன்றாகவே இன்னும் உள்ளன.

quantum fluctuation மூலமாக இந்த பிரபஞ்சம் உருவானதா?

அண்டவியலின் தற்போதைய பார்வையின்படி, இந்தப் பிரபஞ்சத்தில் நாம் காணும் அனைத்தும் விண்ணில் ஒரு புள்ளியில் ஆற்றலின் அளவில் ஏற்பட்ட தற்காலிக குவைய ஏற்ற-இறக்கங்களால் (quantum fluctuation) உருவானது. இந்தப் பிரபஞ்சம் உருவான பிறகு, காஸ்மிக் இன்ஃப்ளேஷன் என்று அறியப்படும் மிகக் குறுகிய காலத்தில் மிக வேகமாக விரிவடைந்தது.

அந்த விரிவாக்கத்தின் போது ஆற்றலின் அளவில் ஏற்பட்ட தற்காலிக குவைய ஏற்ற-இறக்கம் நீட்டிக்கப்பட்டது. இந்த நீட்சி பிரபஞ்சத்தில் சிற்றலைகளை விதைத்தது. இந்த சிற்றலைகளில் இருந்துதான் பால்வெளி, கோள்கள், பூமி மற்றும் மக்களின் தோற்றம் உருவானது.

இங்கு மர்மம் என்னவென்றால் மிக நுண்ணிய அளவிலான quantum fluctuation பால்வெளி விண்மீன் மண்டலமாக மாற முடியுமா என்பதே. சில ஆண்டுகளுக்கு முன்பு இது சந்தேகத்திற்குரிய ஒன்று. ஆனால், இன்று காஸ்மிக் கட்டமைப்பு உருவாக்கத்தின் பொதுவான உதாரணம் இதுதான்.

கடந்த காலத்திற்கு பயணிக்க முடியுமா?

நேரம் இயற்பியல் வல்லுநர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் சுவாரஸ்யமான ஒன்றாக உள்ளது. உதாரணமாக, நீங்கள் வேகமாக பயணித்தால், நேரம் மேலும் குறையும். நீங்கள் ஒளியின் வேகத்தில் பயணித்தால், நேரம் வெறுமனே நின்றுவிடும்.

இயற்பியலின் சமன்பாடுகளை நீங்கள் பார்த்தால், நேரம் முன்னோக்கி அல்லது பின்னோக்கிச் செல்ல முடியும் என்பது வியக்க வைக்கிறது. பொதுவாக இயற்பியல் சமன்பாடுகள் முன்னோக்கி, பின்னோக்கி என வேறுபடுத்தாது.

எனவேதான் பலர் கடந்த காலத்திற்கு செல்ல முடியும் என நினைக்கின்றனர். எதிர்காலத்துடன் எந்தவித முரண்பாடுகளையும் நாம் ஏற்படுத்தாத வரை, நாம் பின்னோக்கிப் பயணிக்க முடியும் என்பது கொள்கையளவில் சாத்தியமானது. பொதுவாக அறிவியலில் எப்போதும் இருப்பது போல இந்த ஒவ்வொரு மர்மமும் மற்றொரு அல்லது அதைவிட பெரிய மர்மத்திற்கு வழிவகுக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்