நிவர் புயலின் நிலவரம்: உங்களுக்கான 10 முக்கிய தகவல்கள்

புதன், 25 நவம்பர் 2020 (15:06 IST)
வங்கக் கடலின் தெற்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்துள்ளதால் உருவான நிவர் புயல் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.

 
நிகர் புயல் குறித்த 10 முக்கியத் தகவல்கள்: 
நிவர் புயல் நவம்பர் 25 மற்றும் நவம்பர் 26 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவிலோ, நவம்பர் 26 அதிகாலை நேரத்திலோ கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
 
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரைப் பகுதியில், காரைக்கால் மற்றும் மகாபலிபுரத்துக்கு இடையே நிவர் புயல் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 8.30 மணியளவில் , நிவர் புயல் கடலூரில் இருந்து தென்கிழக்கே 240 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்தது.
 
கடந்த ஆறு மணி நேரத்தில், அந்தப் புயல் வடமேற்கு திசையில் மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நிவர் புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் காற்றி வேகம் மணிக்கு 120 முதல் 130 கிலோ மீட்டராக இருக்கும் என்றும், அது 145 கிலோ மீட்டர் வரைகூட செல்லலாம் என்றும் இன்று மதியம் 1 மணியளவில் இந்திய வானிலை ஆய்வுத் துறை கூறியுள்ளது.
 
புதுச்சேரி மற்றும் கடலூர் துறைமுகங்களில் 10ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த 10ஆம் எண் எச்சரிக்கை கூண்டு என்பது அதி தீவிர புயல் உருவாகியுள்ளது என்றும், அது துறைமுகம் அருகே கடந்து செல்லும் பெரும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் குறிக்கும்.
 
சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் பேரபாயத்தைக் குறிக்கும் 9ஆம் எண் கூண்டு ஏற்றப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 8ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 8ஆம் எச்சரிக்கை கூண்டு என்பது துறைமுகத்தின் இடது பக்கமாக புயல் கரையை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் துறைமுகப் பகுதியில் வானிலை கடுமையாகும் என்றும் பொருள்.
 
தமிழகத்தின் 13 மாவட்டங்களில் நாளை மீட்புப்பணிகளுக்காக விடுமுறை அளிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அத்திவாசியப் பணிகள் தொடர்ந்து இயங்கும். 28ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
 
கனமழை காரணமாக இன்று நற்பகல் 12 மணியளவில் சென்னை செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டது. நேற்று இரவு மட்டும் சென்னையில் நுங்கம்பாக்கத்தில் 14 செ.மீ. மழையும் மீனம்பாக்கத்தில் 12 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. சென்னையிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை தொடரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்