சிறுமியின் ஓவியம் ஐநா அமைப்பில் தேர்வு

வெள்ளி, 25 ஏப்ரல் 2014 (07:16 IST)
ஐநா மன்றத்தின் சுற்றுச்சூழல் செயற்திட்டத்துக்கான ஆசிய பசிபிக் பிராந்திய சிறார் ஓவியப்போட்டியில் இந்த ஆண்டு இலங்கையைச் சேர்ந்த எட்டுவயது மாணவியின் ஓவியம் சிறந்த ஓவியமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.



இதற்காக அந்த சிறுமிக்கு ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசும், நைரோபியில் நடக்கும் இந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்கு அவருக்கும், அவரது பெற்றோர் மற்றும் ஆசிரியருக்கான விமான பயணச் செலவும் வழங்கப்படும்.
 
ஐநா மன்றத்தின் சுற்றுச்சூழல் செயற்திட்டத்தின் சார்பில் உலகு தழுவிய அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஆண்டுதோறும் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரத் தலைப்பாக வீணாகும் உணவும் பூமிப்பந்தின் பாதுகாப்பும் என்கிற தலைப்பு அறிவிக்கப்பட்டது. உணவை பாதுகாப்பீர், அதன் மூலம் பூமியை பாதுகாப்பீர், உணவை விரயம் செய்வது உலகை விரயம் செய்வதாகும் என்பது இந்த ஆண்டுக்கான மையக்கருத்தாகவும் தெரிவிக்கப்பட்டது.
 
இதை ஒட்டி உலக நாடுகள் அனைத்திலிருந்தும் சிறார்களுக்கான ஓவியப்போட்டி ஒன்றை, ஐநாவின் சுற்றுச்சூழல் அமைப்பும், ஜப்பானில் இருக்கும் உலக அமைதி மற்றும் சுற்றுச்சூழலுக்கான அமைப்பும் நிக்கான் நிறுவனமும் இணைந்து நடத்தின. இந்த போட்டி பிரிவுக்கு மொத்தம் 63,700 ஓவியங்கள் குவிந்தன.
 
இதில் இலங்கையைச் சேர்ந்த எட்டு வயதுடைய கந்தகே கியாரா செனுலி பெரேரா வரைந்த ஓவியம் இந்த போட்டியின் நடுவர்களை பெரிதும் கவர்ந்து சிறப்பான ஓவியமாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
 
அவர் வரைந்திருக்கும் வண்ணமயமான ஓவியத்தில் சிறார்கள் ஒன்றிணைந்து மகிழ்ச்சியுடன் உணவு தானியங்கள் மற்றும் காய்கறிகளை கூட்டாக சேர்ந்து ஒரு பெரிய உண்டியலில் சேமிப்பதைப்போல வரையப்பட்டிருக்கிறது.
 
உண்டியல் சேமிப்பே ஓவியத்துக்கான உந்துதல்
 
தான் சிறுவயது முதலே உண்டியலில் நாணயங்களை சேமிக்கும் பழக்கம் உடையவர் என்று தெரிவித்திருக்கும் கியாரா, தனது அந்த பழக்கத்தை அப்படியே காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை உணவு உண்டியலில் சேமிப்பதன் மூலம் இந்த பூஉலகை பாதுகாக்க முடியும் என்பதை விளக்கும் வகையிலான இந்த ஓவியத்தை வரைந்ததாக தெரிவித்தார். இந்த ஓவியம் மூலம், உலக சிறார்களெல்லாம் சிறு எறும்புகளைப்போல் உணவை சேமித்தால், எதிர்காலத்தில் இந்த பூவுலகை நாம் பாதுகாக்க முடியும் என்பதை இந்த ஓவியம் மூலம் சொல்ல விரும்புவதாக தெரிவித்தார் கியாரா.
 
அவரது இந்த ஓவியமும் மற்ற பிராந்தியங்களில் தேர்வு செய்யப்பட்ட ஓவியங்களும் ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் காட்சிக்கு வைக்கப்படுவதோடு, ஐநா மன்றத்தின் சுற்றுசூழல் அமைப்பு, உலக அமைதி மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு ஆகியவற்றின் இணைய பக்கங்களிலும் காட்சிக்கு வைக்கப்படும்.
 
இதன் அடுத்தகட்டமாக, இவரது இந்த ஓவியம், மேற்காசியா, ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா, கரீபியன், ஐரோப்பா மற்றும் அமெரிக்க பிராந்தியங்களில் தேர்வாகியிருக்கும் மற்ற சிறார்களின் ஓவியங்களுடனான இரண்டாம் கட்ட போட்டியில் பங்கேற்கும்.
 
அந்த போட்டியில் வெல்லும் ஓவியம் சுற்றுசூழல் பாதுகாப்புக்கான சிறார்கள் வரைந்த உலக அளவிலான மிகச்சிறந்த ஓவியமாக தேர்ந்தெடுக்கப்படும். அப்படி தேர்ந்தெடுக்கப்படும் ஓவியத்துக்கு இரண்டாயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசும், நைரோபியில் நடக்கும் இந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்கு அந்த ஓவியத்தை வரைந்த சிறாருக்கும் அவரது பெற்றோர் மற்றும் ஆசிரியருக்குமான விமான பயணச் செலவும் வழங்கப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்