அவர் வெள்ளியங்கிரி மலைகளைக் காண நேர்ந்ததுமே புரிந்துபோனது, இதுதான் சதா கண்களுக்குள் இருக்கும் அந்த மலைகள் என்று. அது மட்டுமில்லை... தியானலிங்கம் அமைப்பதற்கான இடமும் இதுதான் என்பது புரிந்துபோனது. இடத்தின் உரிமையாளர்களை அதற்குமுன் அறிமுகம் கிடையாது. நேரடியாகச் சந்தித்து இந்த நிலம் வேண்டும் என்று கேட்க... அடுத்த பத்தாவது நாளே நிலம் ஈஷா யோகா மையத்துக்குச் சொந்தமாயிற்று.
WD
சமூக சூழ்நிலை தயார். இடம் தயார். கொஞ்சம் கொஞ்சமாகச் சேகரித்துச் சேமித்த பொருளும் தயார். உடல் உழைப்பைத் தர ஆயிரக்கணக்கான தியான அன்பர்கள் தயார். பலவிதமான செலவுகளில் பங்கெடுத்துக்கொள்ள ஈஷா மேல் அன்பும், மதிப்பும் கொண்ட ஈகை உள்ளங்கள் தயார்.
அடுத்து தயாராக வேண்டியது சரியான குழு!
தியானலிங்கம் என்பது வெறுமனே லிங்க வடிவத்தில் ஒரு கல்லை நிறுத்தி வைக்கும் காரியம் அல்லவே. தியானலிங்கம் என்பது ஓர் உயர்ந்த சக்தி நிலை. ஏழு சக்கரங்களும் உச்ச நிலையில் தூண்டப்பட்ட நிலையில் எப்போதும் இருக்கும் ஆன்மீக அற்புதம்!
ஒரு கல்லுக்கு ஏழு சக்கரங்கள் அமைப்பதும் அதற்குச் சக்தியளிப்பதும் பிரதிஷ்டை என்பதாகும். அதைச் செய்வது அறிவியலும் ஆன்மீகமும் இணைந்த சூட்சுமமான சூத்திரம்.
இந்தத் தியானலிங்கம் பிரதிஷ்டையில் சத்குருவோடு பக்கபலமாக துணை நிற்கப் போகிற நபர்களைத் தேர்வு செய்வதற்காக 90 நாட்கள் ஒரு ஹோல்னெஸ் பயிற்சி நடைபெற்றது. அதில் சுமார் 70 பேர் பங்கேற்றார்கள். அந்த 70 பேரிலிருந்து 14 பேர்களை மட்டும் தேர்வு செய்வதே அந்தப் பயிற்சியின் நோக்கம்.
அதேபோல 14 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள். தியானலிங்கம் பிரதிஷ்டையில் பங்கு பெறும் நபர்களுக்கு கர்ம வினைகள் கரைந்திருக்க வேண்டும். அவை தாமாகக் கரைய காத்திருக்க முடியாததென்பதால், தீவிரமான கிரியைகளும் ஆத்ம சாதனைகளும் அவர்களுக்கு வழங்கி, அவர்களின் கர்ம வினைகளைக் கரைப்பதற்கு துரிதம் காட்டப்பட்டது. அந்த 14 பேரையும் உடலோடு மிக குறைந்தபட்சத் தொடர்போடு உள்ள நிலையில் உருவாக்குவதற்கான முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் அது சாத்தியமாகாமல் போனது. ஒரே நிலையிலான உடல், மனம், உணர்வு என்று ஒன்றிப்போகிற 14 பேரை உருவாக்குவது எளிதாக இல்லை. பெரிய முயற்சிகள் எடுக்கப்பட்டும் அது நிகழவில்லை.
இறுதியில் 14 பேர்களுக்கு பதிலாக சத்குருவோடு இணைந்து பணியாற்ற ஒரே மனம், உணர்வு, உடல் கொண்ட இரண்டே பேரை மட்டும் தயார்செய்ய முடிவு செய்யப்பட்டது. அது கொஞ்சம் சுலபமாகவும் இருந்தது. அந்த இருவரும் சத்குருவுடன் ஒரே சக்தி நிலையில் இணைந்து நின்று பிரதிஷ்டையில் ஒரு முக்கோணச் சக்தி வடிவமாக செயல்படுகிற சூழல் உருவாக்கப்பட்டது.
சத்குரு, மற்றும் அந்த இரண்டு பேர் அந்த முக்கோண நிலையில் உணர்வு, சக்திநிலை, மனம் எல்லாவற்றிலும் ஒன்றுபட்டபோது... மூவருக்கும் அந்த அனுபவம் வேறு மாதிரியாக இருந்தது.
அதாவது... மூவருக்கும் இது இவர் வாழ்க்கை, அது அவர் வாழ்க்கை என்று பிரிக்க முடியாமல் மூவரின் வாழ்க்கையும் சேர்ந்தே மூவரும் வாழும் ஒரு விசித்திர அனுபவம். ஒருவருக்கு காலில் வலி என்றால் அதை மற்ற இருவரும் உணர்வார்கள். ஒருவரின் வாழ்வில் பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு சம்பவம் நிகழ்ந்திருந்தால்... இப்போது மற்ற இருவருக்கும் அது தெரியும். மூவருக்குள்ளும் எந்த ரகசியமும் இல்லாத ஒன்றுபட்ட அதிசய நிலை. அதே சமயம் அது அபாயமான நிலையும்கூட!
சத்குருவுடன் பணியாற்றிய மற்ற இருவரில் ஒருவர், மகா சமாதியாகிவிட்ட அவரின் மனைவி விஜி அவர்கள்!