திமுகவில் இணைவா? அரசியல் ஓய்வா? - நாஞ்சில் சம்பத் அடுத்த மூவ்

புதன், 21 டிசம்பர் 2016 (12:30 IST)
வைகோவின் தீவிர விசுவாசியாகவும், ம‌திமுக கொ‌ள்ளை பர‌ப்பு செயலாளராகவும் இருந்த நா‌‌ஞ்‌சி‌ல் ச‌ம்ப‌த், அவருக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக‌ கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிமுகவில் இணைந்தார்.


 

வைகோவும் தமது கட்சி ஏடான சங்கொலியில் நாஞ்சில் சம்பத்தை மறைமுகமாக விமர்சித்தார். இதனையடுத்து கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாஞ்சில் சம்பத், ஜெயலலிதா வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்தப் பின் அதிமுகவில் ஐக்கியமானார்.

பின்னர், அதிமுகவில் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதன் பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நாஞ்சில் சம்பத், அதிமுக பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றியதுடன், தொலைக்காட்சிகளில் நடைபெற்ற விவாதங்களில் பங்கேற்று அதிமுக தரப்பிலான கருத்துக்களை எடுத்து வைத்தார்.

நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நாஞ்சில் சம்பத், அதிமுகவில் வகித்து வந்த கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவியில் இருந்து ஜனவரி 2ஆம் தேதி திடீரென்று நீக்கப்பட்டார். மழை வெள்ளம் குறித்த தொலைக்காட்சி விவாதத்தில், பங்கேற்று பேசியதே காரணம் என்று கூறப்பட்டது.

இதற்கிடையில், பெரும்பாலான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்த்துவந்த நாஞ்சில் சம்பத் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அப்பல்லோ வந்து சென்றார்.

கடந்த 6ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் மறைவை அடுத்து, யார் கட்சியின் பொதுச்செயலாளர் ஆவது என்ற பிரச்சனை நீடித்து வருகிறது. ஜெயலலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாதான் வர வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாகவே நாஞ்சில் சம்பத் அரசியலில் இருந்து விலகிவிட்டதாக தொடர்ந்து தகவல்கள் பரவி வந்தன. ஆனால், அவரது மகள் மதிவதனி இதனை திட்டவட்டமாக மறுத்தார்.

தனது தந்தை நாஞ்சில் சம்பத் அரசியலிலிருந்து விலகபோவதாக இதுவரை யாரிடமும் கூறவில்லை என்றும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்றும் தெரிவித்தார்.

இதனிடையே தற்போது நாஞ்சில் சம்பத், அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணையப்போவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து நெருங்கிய ஆதரவர்களிடம் ஆலோசனை செய்ததாகவும் தெரிய வருகின்றன.

மேலும், இது குறித்து ஸ்டாலினிடம் வேறு ஒருவர் மூலம் தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளதாகவும், வரும் ஆண்டு ஜனவரி மாதம் இதற்கான ஏற்பாடுகள் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இதுவரை நாஞ்சில் சம்பத் சசிகலாவை சந்திக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்