சசிகலா போஸ்டரை கிழிப்பவர்கள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.10 ஆயிரம் பரிசு

வியாழன், 5 ஜனவரி 2017 (11:06 IST)
அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலாவின் உருவ படங்கள் அடங்கிய பேனர்கள் மற்றும் போஸ்டர்களை கிழிக்கும் நபர்கள் பற்றி துப்பு கொடுத்தால் சன்மானம் அளிக்கப்படும் என அதிமுகவினர் அறிவித்துள்ளனர்.


 

 
பொதுச்செயலாளராக உள்ள சசிகலா, தமிழகத்தின் முதல்வராக அமர வேண்டும் என்ற அதிமுகவினரின் கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. ஒரு பக்கம் ஆதரவு பெருகினாலும், மறுபக்கம் எதிர்ப்பும் பெருகி வருகிறது. ஏராளமான அதிமுக நிர்வாகிகள் அவருக்கு எதிராக செயல்படுவதாக தெரிகிறது.
 
இதை உணர்த்தும் வகையில், தமிழகத்தின் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த சசிகலா உருவப்படம் உள்ள பேனர் மற்றும் போஸ்டர்கள் அதிமுகவினரால் கிழிக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் சசிகலா புகைப்படத்தில் சாணி அடித்தும் அதிமுகவினர் தங்கள் எதிர்ப்புகளை காட்டி வருகின்றனர். இது அதிகரித்து வருவதால், சசிகலாவின் ஆதரவாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.


 

 
முக்கியமாக, நெல்லை மாவட்டங்களில் சசிகாலவிற்கு கணிசமான எதிர்ப்பு அலைகள் இருக்கிறது. தென்காசி, சங்கரன் கோவில், வள்ளியூர், கடைய நல்லூர் ஆகிய பகுதிகளில் ஏராளமான அதிமுகவினர் தீபாவிற்கு ஆதரவாக ஃபிளக்ஸ் பேனர்களை வைத்துள்ளனர். அதேபோல் அந்த பகுதிகளில்தான் சசிகலாவின் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டும், தார் மற்றும் சாணத்தை பூசியும் அவர்கள் தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.
 
எனவே இதை எப்படி தடுப்பது என அந்த பகுதி சசிகலா ஆதரவு அதிமுகவினர் ஆலோசனை செய்து வந்தனர். இதன் விளைவாக, எம்.ஜி.அர் இளைஞரணிச் செயலாளர் பல்லிக்கோட்டை செல்லத்துரை என்பவர், சசிகலா உருவப்படம் உள்ள போஸ்டர்களை சேதப்படுத்துபவர்கள் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் சன்மானம் அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்