கேப்டன் இல்லை; அண்ணியார் தான் - கூட்டமில்லாமல் பிசுபிசுத்த தேமுதிக பிரச்சாரம்

செவ்வாய், 8 நவம்பர் 2016 (15:27 IST)
நடந்து முடிந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் பணப்பட்டுவாடா உள்ளிட்ட பிரச்சனைகளால், தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 232 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது.


அதேபோல் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சீனிவேல் மரணமடைந்ததை அடுத்து 3 தொகுதிகளும் சட்டசபையில் பிரதிநிதித்துவம் இல்லாமல் காலியாக உள்ளன.

இந்நிலையில், தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் வருகிற நவம்பர் மாதம் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் ஏற்கனவே தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்ள தொடங்கி விட்டன.

இந்நிலையில், தேமுதிக சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் அரவை எம். முத்துவும், திருப்பரங்குன்றம் தொகுதியில் தனபாண்டியன், தஞ்சாவூர் தொகுதியில் அப்துல்லா சேட் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதனையடுத்து தேமுதிகவும் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன. இதன் முதற்கட்டமாக, பிரேமலதா விஜயகாந்த் அரவக்குறிச்சி அரவக்குறிச்சி தொகுதியில் இரு தினங்கள் பிரசாரம் மேற்கொண்டார். ஆனால், தேமுதிக தலைவர் விஜயகாந்த் இந்த பிரச்சாரத்தில் பங்கேற்கவில்லை.

10க்கும் மேற்பட்ட இடங்களில் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால், தேமுதிக கூட்டத்திற்கு கூடும் பொதுமக்களில் 50 சதவீதம் பேர் கூட கூடவில்லை. பல இடங்களில் கூட்டம் மிக குறைவாக இருந்ததால் தேமுதிகவினர் சோர்விற்கு உள்ளாகினர்.

ஆனாலும், பிரேமலதா விஜயகாந்தின் பேச்சில் அனல் பறந்தது. வழக்கம்போலவே திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் வெளுத்து வாங்கினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்