பிரேமலதாவுக்கு புதிய பதவி? : தேமுதிகவில் புதிய திருப்பம்

வியாழன், 28 ஜூலை 2016 (11:22 IST)
சட்டமன்ற தேர்தலில் தேமுதிக,  மக்கள் நலக் கூட்டணியுடன் இனைந்து மொத்தம் 104 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், விஜயகாந்த் உட்பட அனைத்து தேமுதிக வேட்பாளர்களும் படுதோல்வி அடைந்தனர். தேமுதிகவின் வாக்கு எண்ணிக்கையும் அதள பாதாளத்திற்கு சென்றது. 


 

 
அதன்பின், தேமுதிக சந்தித்த தோல்வி பற்றி விஜயகாந்த் தனது கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அனைவரிடமும் ஆலோசனை நடத்தினார்.  அப்போது கட்சி பணிகளில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் மைத்துனர் சுதீப் ஆகியோரின் தலையீடு அதிகமாக இருக்கிறது மேலும் பிரேமலதாவின் தவறான கூட்டணி முடிவுதான் தோல்விக்கு காரணம் என அவர்கள் குற்றம் சாட்டினர். 
 
எனவே, எந்த முடிவானாலும் நீங்களே எடுங்கள் என்று அவர்கள் விஜயகாந்தை வற்புறுத்தினார்கள். மேலும், இதுவரை பல தேமுதிக மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் திமுக,அதிமுக போன்ற கட்சிகளுக்கு தாவி விட்டனர். இன்னும் சிலரை வெளியே இழுக்க, மக்கள் தேமுதிக தலைவர் சந்திரகுமார் முயன்று வருகிறார். 
 
எனவே கட்சியை காப்பாற்றுவதற்காக, கட்சி பணியிலிருந்து பிரேமலதா விலகி இருப்பார் என்று தேமுதிக வட்டாரத்தில் கூறப்பட்டது. 
 
இந்நிலையில் திடீர் திருப்பமாக, தேமுதிக மகளிர் அணி செயலாளராக இருக்கும்  பிரேமலதாவிற்கு  கொள்கை பரப்பு செயலாளர் அல்லது அதற்கு இணையான பதவி அளிக்க விஜயகாந்த் முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
பிரேமலதாவுக்கு புதிய பதவி கொடுக்கும் பட்சத்தில், அவருக்கு நிர்வாகிகள் பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பில்லை. அதேபோல், இந்த முடிவை விஜயகாந்த் தன்னிச்சையாக எடுத்தார் என்று கூறிவிடக்கூடாது என்பதற்காகாக, ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட செயலாளர் கூட்டம் நடத்தப்பட்டு, இதை ஒரு தீர்மானமாக கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தேமுதிகவை பலப்படுத்த, கட்சியின் தலைவர் விஜயகாந்த் இந்த முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்