அதிமுகவை சுக்கு நூறாக்க நடராஜன், திவாகரன் போதும்: ஹெச்.ராஜா பதிலடி

புதன், 18 ஜனவரி 2017 (13:34 IST)
அதிமுகவை சுக்குநூறாக ஆக்குவதற்கு வேறு யாரும் தேவை இல்லை. சசிகலாவின் கணவர் நடராஜன், திவாகரன் போதும் என பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.


 

முன்னதாக தஞ்சாவூரில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் பேசிய நடராஜன், “அதிமுகவை உடைக்க மத்திய பாஜக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அவர்களுடைய திட்டம் ஒருபோதும் நிறைவேறாது. அதிமுகவை உடைக்கும் பிரதமர் மோடியின் எண்ணமும் நிறைவேறாது'' என்றார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டிருந்த பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், 'ராணுவ கட்டுப்பாட்டுடன் இருக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு கட்சி ஏன் இப்படி அரண்டுபோய் பேசுகிறது என்று எனக்கு தெரியவில்லை' என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

பிறகு தஞ்சையில் நடராஜன் இன்று பேசுகையில், தீபாவை இயக்குவது பாஜகதான் என்று அதிமுகவை உடைக்க நடக்கும் முயற்சிகளை ஆதாரத்துடன் வெளியிடுவேன் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், காரைக்குடியில் செய்தியாளர்களிடத்தில் பேசிய பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா, “அதிமுக ஆட்சியை கலைக்க பாஜக முயற்சி செய்கிறது என்ற நடராஜனின் கூற்று உள்நோக்கம் கொண்டது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை அவர் முன்னே வரக்கூட தைரியம் இல்லாத நபர்கள், ஜெயலலிதாவால் அதிமுகவை விட்டு நீக்கி வைக்கப்பட்டவர்கள் இப்போது தைரியமாகப் பேசுகிறார்கள்.

அதிமுகவை சுக்குநூறாக ஆக்குவதற்கு வேறு யாரும் தேவை இல்லை. சசிகலாவின் கணவர் நடராஜன், திவாகரன் போதும். தற்போதைய அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு மறைமுகமாகக் குழி தோண்டும் வேலையை நடராஜன், திவாகரன் செய்கின்றனர். இவர்கள் இருவரும் கட்சியை அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்