சட்டசபையில் தற்கொலை மிரட்டல் விடுத்த மு.க.ஸ்டாலின், துரை முருகன்..

செவ்வாய், 21 பிப்ரவரி 2017 (15:00 IST)
கடந்த சனிக்கிழமை தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தது.


 

 
ஆனால் சபாநாயகர் இதனை ஏற்காததால் சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. சபாநாயகர் இருக்கை, மைக் சேதப்படுத்தப்பட்டது. புத்தகங்கள் கிழிக்கப்பட்டன, கூச்சல் குழப்பம் ஏற்பட்டு சபை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. 
 
இதனிடையே மு.க.ஸ்டாலின் உட்பட திமுக உறுப்பினர்கள் சபைக்காவலர்களால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இதில் தனது சட்டை கிழிக்கப்பட்டதாக பகிரங்கமாக ஊடகங்கள் முன்னால் தெரிவித்தார் மு.க.ஸ்டாலின். 
 
இந்நிலையில், மு.க.ஸ்டாலினை அப்புறப்படுத்த போலீசார் முயன்ற போது, அவர் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார், அதேபோல், எங்களிடம் பிளேடு இருக்கிறது. வலுக்கட்டாயமாக வெளியேற்றினால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் என துரைமுருகன் மிரட்டல் விடுத்துள்ளார். ஆனால், அதையும் பொருட்படுத்தாமல் காவலாளிகள் அவர்கள் இருவரையும் அங்கிருந்து வெளியேற்றினார்கள் என்ற செய்தி தற்போது வெளியே கசிந்துள்ளது. இதுபற்றி தனக்கும் செய்தி வந்ததாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
 
ஆனால், துரைமுருகன் தன் வசம் எந்த பிளேடும் வைத்திருக்கவில்லை என்றும், போலீசாரை ஏமாற்றவும், வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதிலிருந்து தப்பிக்கவுமே அவர் அப்படி கூறினார் எனவும் செய்திகள் வெளிவருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்