இணையும் இரு அணிகள் ; 5 அமைச்சர்களின் பதவி கல்தா? - ஓ.பி.எஸ் அணி தீவிரம்

வியாழன், 20 ஏப்ரல் 2017 (15:41 IST)
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தால், தினகரனுக்கு விசுவாசமாக இருந்த 5 அமைச்சர்களின் பதவி பறிக்கப்படும் எனத் தெரிகிறது.


 

 
தினகரனை கட்சியிலிருந்து விலக்குவது என அதிமுகவின் முக்கிய அமைச்சர்கள் முடிவெடுத்து விட்டனர். தினகரனும் விலகிக் கொண்டார். தற்போது யாருக்கு முதல்வர் பதவி? யார் பொதுச்செயலாளர்? மற்றும் அமைச்சரவையில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்து இரு அணிகளும் நாளை கூடி விவாதிக்க உள்ளனர். 
 
தினகரனை விலக்கி வைப்பது தவிர ஓ.பி.எஸ் அணிக்கு வேறு சில கோரிக்கைகளும் இருக்கின்றன. அதில் முதலாவது, ஓ.பி.எஸ்-ஸிற்கு முதல்வர் பதவி, அதேபோல் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட சிலருக்கு அமைச்சர் பதவிகள் தர வேண்டும், முக்கியமாக தினகரனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, உடுமலை கிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார் ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட வேண்டும் என்பதில் ஓ.பி.எஸ் அணி மிகவும் தீவிரமாக இருக்கிறது. 
 
அவர்கள் இருப்பது நமக்கு சிக்கல்தான் என நினைக்கும் எடப்பாடி பழனிச்சாமி அணியும் இதற்கு சம்மதம் தெரிவிக்கும் எனத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சியில் இருக்கும் அந்த 5 அமைச்சர்களும், தற்போது ஓ.பி.எஸ் புகழ் பாட தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்