தீபக் உள்ளே.. தீபா வெளியே.. - ஓ.பி.எஸ்-ஸோடு இணைந்து செயல்பட தயக்கம்...

வியாழன், 23 பிப்ரவரி 2017 (17:38 IST)
ஜெ.வின் அண்ணன் மகள் தீபா, தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்-ஸோடு இணைந்து செயல்பட தயக்கம் காட்டி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
ஜெ.வின் மறைவிற்கு பின், அதிமுக சசிகலா குடும்பத்தினரின் கையில் அதிமுக செல்வதை விரும்பாத பல தொண்டர்கள், ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவை அரசியலுக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். தீபாவும் அதை ஏற்றுகொண்டு விரைவில் தன் முடிவை அறிவிக்க உள்ளதாக கூறியிருந்தார். அந்நிலையில், சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கிய பின், மக்களின் ஆதரவு ஓ.பி.எஸ் பக்கம் திரும்பியது. எனவே, ஓ.பி.எஸ்-ஸோடு இணைந்து செயல்பட உள்ளதாக தீபா கூறினார்.
 
ஆனால், சசிகலாவின் ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமி, தமிழக முதல்வர் பதவியில் அமர்ந்தார். இது ஓ.பி.எஸ் அணிக்கு தோல்வி முகத்தை கொடுத்தது. நாளை ஜெ.வின் 69வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதற்காக ஆர்.கே.நகரில் ஓ.பி.எஸ் மற்றும் தீபா பங்குபெறும் நிகழ்ச்சி ஒன்றை ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். 
 
இந்நிலையில், அந்த நிகழ்ச்சிக்கு செல்ல தீபா தயக்கம் காட்டி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நாளைக்கு ஆர்.கே.நகர் செல்வது பற்றி தீபா இன்னும் முடிவு எடுக்கவில்லை என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். ஓ.பி.எஸ்-ஸோடு இணைந்து செயல்பட்டால் தீபாவின் தனித்துவம் குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாக அவரின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனராம். மேலும், அவர் ஓ.பி.எஸ்-ஸொடு இணைந்து செயல்படுவதற்கு தீபா பேரவையை சேர்ந்த பல நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனராம். எனவேதான், தீபா தயக்கம் காட்டி வருவதாக தெரிகிறது. 
 
ஜெ.வின் அண்ணன் மகனும், தீபாவின் சகோதரனுமாகிய தீபக் இன்று திடீரெனெ ஓ.பி.எஸ்-ற்கு ஆதரவு தெரிவித்துள்ள வேளையில், தீபா என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பது பற்றி அவரது ஆதரவாளர்களுக்கிடையே குழப்பம் நிலவி வருகிறது..
 

வெப்துனியாவைப் படிக்கவும்