ஜெ.வின் மரணத்திற்கு பின், அவர் வகித்து வந்த அதிமுக பொதுச்செயலாளர் பதவி, அவரின் தோழி சசிகலாவிற்கு வழங்கப்பட்டது. அதன் பின் அவரே முதல்வராக அமர வேண்டும் என தம்பிதுரை உள்ளிட்ட சிலர் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். ஆனால், கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு இல்லை எனத் தெரிகிறது.
எனவே, சசிகலாவின் தலைமையை ஏற்றுக்கொள்ள முடியாத அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவை முன்னிறுத்தி தங்கள் அரசியல் பயணத்தை தொடர்ந்து வருகின்றனர். அவர்கள் தினமும் தீபாவின் வீட்டிற்கு சென்று, அரசியலுக்கு வருமாறு வற்புறுத்தி வந்தனர். எனவே, விரைவில் அரசியலுக்கு வருவேன் என அவரும் கூறிவந்தார். ஜெ.வின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி தன்னுடைய அரசியல் முடிவை அறிவிப்பேன் என தீபாவும் கூறியுள்ளார். மேலும், வருகிற 5ம் தேதி தமிழகம் முழுவதும் 6 நாட்கள் சுற்றுப்பயணமும் அவர் மேற்கொள்கிறார்.
இந்நிலையில், அவர் அதிமுக முன்னணி தலைவர்களின் ரகசிய பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார் என செய்திகள் வெளியானது. ஆனால், அதை அவர் மறுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிம் கருத்து தெரிவித்த அவர் “ நான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். என்னைப் பற்றி தேவையில்லாத வதந்திகளை பரப்புகிறார்கள். நான் எந்த அதிமுக தலைவர்களுடனுன் ரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை. எனை நம்பி எனது வீட்டின் முன்பு குவியும் எனது ஆதரவாளர்களின் நம்பிக்கைக்கு பங்கம் வராமல் எனது அரசியல் பிரவேசம் நிகழும்” என அவர் தெரிவித்துள்ளார்.