கரூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை முதல் உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் துவங்க இருக்கிறது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர், 17, 19ம் தேதிகளில், இரண்டு கட்டமாக நடக்கிறது. இதற்கு வேட்பு மனு தாக்கல் இன்று முதல் துவங்கி, வரும் 3ம் தேதி வரை நடக்கிறது.
இதன்படி கரூர் மாவட்டத்தில், இரண்டு நகராட்சிகளில், 12 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள், 11 பேரூராட்சிகள், எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடக்கிறது. அந்தந்த பதவிகளுக்குரிய அலுவலங்களில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்பு பதவி மற்றும் வேட்பு மனு தாக்கல் செய்யும் இடம் விவரம் வருமாறு: நகராட்சி கவுன்சிலர்கள் - கரூர், குளித்தலை நகராட்சி அலுவலகங்கள்; மாவட்ட பஞ்., கவுன்சிலர்கள் - மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள்; பேரூராட்சி கவுன்சிலர்கள் - டி.என்.பி.எல்., பள்ளப்பட்டி, புஞ்சைபுகளூர், புலியூர், அரவக்குறிச்சி, நங்கவரம், உப்பிடமங்கலம், புஞ்சை தோட்டக்குறிச்சி, மருதூர் பழைய ஜெயங்கோண்ட சோழபுரம், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி அலுவலகங்கள்; ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் - கரூர், தான்தோன்றிமலை, அரவக்குறிச்சி, க.பரமத்தி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர், தோகைமலை ஆகியோர், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள்; 12 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் - அந்தந்த பஞ்சாயத்து அலுவலகங்களில், வேட்புமனு தாக்கல் செய்யலாம்.