ரகசியமாக தங்க வைக்கப்பட்டுள்ள 12 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரதம்?

வியாழன், 9 பிப்ரவரி 2017 (22:17 IST)
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஆட்சியை நடத்தப்போவது ஓ. பன்னீர்செல்வமா? அல்லது சசிகலாவா? என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
 

 
இந்நிலையில், ஓ.பி.எஸ் பக்கம் சாய்ந்து விடக்கூடாது என்பதற்காக, அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று குழுவாக பிரிக்கப்பட்டு, பேருந்தில் ஏற்றப்பட்டு, சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
அதில் ஒரு பிரிவினர் கிழக்கு கடற்கரை சாலையில் கல்பாக்கம் அருகேயுள்ள கூவத்தூரின் கோல்டன் பே ரெஸார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் மற்றவர்களை சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
அத்தகைய ரெஸார்ட் பகுதியில் வழக்கமாக செல்லும் மக்கள் கூட செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
 
மேலும், அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாகவும், மற்றவர்களுடன், அவர்களது உறவினர்களிடம் கூட தொடர்புகொள்ள முடியாத அளவுக்கு பாதுகாப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இதனால், ஆத்திரத்தில் உள்ள 12 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சசிகலா தரப்பு அளித்துள்ள விருந்தை புறக்கணித்து விட்டு உண்ணாவிரதம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்