கூடுதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது - மழைராஜ்

செவ்வாய், 1 நவம்பர் 2011 (20:18 IST)
தற்போதைய வானிலை கணிப்பின்படி வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டில் சராசரியை விட கூடுதலாகப் பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் மழைராஜ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:

நவம்பர் மாதம் 1ஆம் தேதி வானிலை கணிப்பின்படி தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழையானது சராசரியைவிட கூடுதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவ மழை 22ஆம் தேதி முதல் தீவிரமடைந்து பெய்து வருகிறது. மேக ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டு தற்போதைய வானிலை கணிப்பின்படி தமிழ்கத்தின் 90 சதவீத மாவட்டங்களில் சராசரியைவிட கூடுதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வடகிழக்கு பருவ மழை காலத்தில் கடலூர், புதுச்சேரியை மையமாகக் கொண்டும், தூத்துக்குடி, கன்னியாகுமரியை மையமாகக் கொண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் வாய்ப்புள்ளது. இதனால் கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்ய வாய்ப்புள்ளது.

விருதுநகர், தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் சராசரி மழையைவிட கூடுதல்மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பைவிட கூடுதல் மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

கேரளா மற்றும் ஆந்திராவை பொறுத்தவரை தென்மேற்கு பருவ மழை காலத்தில் பெய்த மழையைவிட பெரும்பாலான பகுதிகளில் வடகிழக்குப் பருவ மழை கூடுதலாக பெய்ய வாய்ப்புள்ளது. கர்நாடகாவிலும் வடகிழக்கு பருவமழை ஒரு சில பகுதிகளில் கூடுதலாக பெய்ய வாய்ப்புள்ளதுடன், வடகிழக்குப் பருவ மழை காலத்தில் மேட்டூர் அணை நிரம்பவும் வாய்ப்புள்ளது. தற்போது பெய்துவரும் மழை நவம்பர் 17 வரை நீடிக்க வாய்ப்புள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்