உலகம் முழுவதும் சாதி, மத, மொழி, இன, இன்னபிற பாகுபாடு ஏதுமின்றி ஒருங்கே கொண்டாடும் விழா என்றால் அது புத்தாண்டு மட்டுமே என்பதில் ஐயமில்லை!
இதில் முக்கியத்துவம் மிகுந்த அம்சம் யாதெனில், புத்தாண்டையொட்டி நாம் எடுத்துக்கொள்ளும் சபதங்கள்.
'இந்த ஆண்டில் சிகரெட்டைத் தொடவே மாட்டேன்' என்பது தொடங்கி 'என்னிடம் உள்ள கோப உணர்வை குறைத்துக்கொள்வேன்' என்பது வரை எத்தனையெத்தனை சபதங்கள்..!
இத்தகைய ஆரோக்கியமான சபதங்களை நிறைவேற்ற முடியாமல் போனாலும், நல்லப் பழக்கங்களைக் கடைப்பிடித்து, நமக்கும், நம் சுற்றத்தாருக்கும் உகந்ததற்ற பழக்கங்களை கைவிட வேண்டும் என்ற எண்ணமே சிறப்புதான்!
இதைக் கருத்தில் கொண்டு பொது வாழ்வில் ஈடுபட்டு இருப்பவர்கள் சிலர், இந்த ஆண்டில் என்னென்ன சபதங்கள் எடுத்துக்கொண்டால், அவை அவர்களுக்கும் நாட்டுக்கும் நன்மை பயக்கும் வகையில் அமையும் என்று யோசிப்போமா...
ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் : எந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றாலும், அதில் மகளிரின் நிலைப் பற்றி மட்டுமே பேசாமல், நாட்டின் முக்கியப் பிரச்சனைகள் அனைத்துக்கும் முக்கியத்துவம் தருவேன்.
பிரதமர் மன்மோகன் சிங் : தன்னிச்சையாக செயல்படுவேன்.
சோனியா காந்தி : எதிர்கட்சிகளை விமர்சிப்பதில் சற்று எச்சரிக்கையாக இருப்பேன். குறிப்பாக, ஷேக்ஸ்பியரின் நாடகத் தலைப்புகளை எடுத்தாள்வதைத் தவிர்ப்பேன். (உபயம் : மெர்ச்சன்ட் ஆஃப் வெனிஸ்சில் இருந்து எடுத்தாளப்பட்ட 'மரண வியாபாரிகள்').
இடதுசாரிகள் : அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் அவ்வப்போது எங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல், ஒரே முடிவை மேற்கொண்டு, அதிலிருந்து பிழறாமல் இருப்போம்.
அத்வானி : 'விரைவில் பாராளுமன்றத்துக்குத் தேர்தல் வரும்' என்று வாரத்துக்கு ஒருநாள் செய்தியாளர்களிடம் கூறுவதைத் தவிர்ப்பேன்.
நரேந்திர மோடி : இஸ்லாமிய சகோதரர்களின் நன்மதிப்பைப் பெறுவேன்!
ப.சிதம்பரம் : 'நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10 சதவிகிதத்தை எட்டும்' என நாளொரு மேனியும் பொழுதொரு மேடையுமாகச் சொல்லிக்கொண்டு இருக்காமல், அதை அடைவதற்கான திட்டங்களை வகுப்பேன்.
கருணாநிதி : கழகத்தில் தலைமையேற்க இளம் தலைமுறைக்கு (இளைஞரணி பொதுச் செயலாலருக்கு!) வழி விடுவேன்.
ஜெயலலிதா : 'சிந்தாதிரிப்பேட்டை கூவம் அருகே கொசுத் தொல்லை இருப்பதைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்' என்பது போன்ற செய்திகள் நாளேடுகளில் வராமல் பார்த்துக்கொள்வேன்.
ராமதாஸ் : '2011-ல் பாமக ஆட்சி' என்று 2011 வரை சொல்லிக்கொண்டிருக்க மாட்டேன்.
அன்புமணி : பாமகவில் புகையிலை, மதுபானம் உபயோகிப்போருக்கு தடை விதிப்பேன்.