ராமன் ஒரு தோட்ட வேலைக்காரன். அவனுக்குத் தன் நண்பர்களைப் பார்க்கும் போதெல்லாம் பொறாமையாக இருக்கும். ராமனுடன் படித்த அவர்கள் எல்லாம் நல்ல வேலையில் இருந்தனர். அதில் முன்னேறிக் கொண்டும் இருந்தனர். இதனால் தான் மட்டும் இப்படித் தோட்ட வேலைக்காரனாகி விட்டோமே என்ற கவலை ராமனை அரித்துக் கொண்டே இருந்தது. படிக்கும் காலத்தில் ராமன் ஓவியம் வரைவதில் திறமைசாலியாக இருந்தான். ஆனால் ஓவியம் வரைந்து விற்றால் போதிய வருமானம் கிடைக்காது என்று அவன் நினைத்தான். இதனால் அவன் தோட்ட வேலை கற்றுக் கொண்டால் பண்ணையார் ஆகிவிடலாம் என்று நம்பினான்.தோட்ட வேலைக்காரன் ஆன பிறகும் எந்த முன்னேற்றமும் வரவில்லை என்பதே ராமனின் கவலையாக இருந்தது. ஒருநாள் அவனுடைய முதலாளி பாத்திரங்கள் வாங்க வெளியூர் சென்றார். உதவிக்கு ராமனை அழைத்துச் சென்றார். சென்ற இடத்தில் ராமன் தேர்வு செய்த பாத்திரங்களைப் பார்த்து முதலாளியே அசந்து போனார். காரணம், ராமன் எடுத்த பாத்திரங்கள் ஒவ்வொன்றும் கலைநயம் மிக்கதாக இருந்தன. முதலாளி கேட்டதற்கு, நீண்ட தயக்கத்திற்குப் பிறகு ராமன் தனக்கு நன்றாக ஓவியம் வரையத் தெரியும் என்று கூறினான்.அவனுடைய முதலாளி நல்லவர். நகரத்தில் உள்ள புகழ்பெற்ற ஓவியக் கடையில் அவனுக்கு வேலை வாங்கிக் கொடுத்தார். அதிலிருந்து ராமனின் கவலைகள் ஒழிந்தன என்பதை விளக்கத் தேவையில்லை. ராமனைப் போலத்தான் நம்மில் பலரும் உள்ளோம். நம்மிடம் உள்ள திறமையின் மீது நாம் நம்பிக்கை வைப்பதில்லை. உடனடி வளர்ச்சிக்கு ஆசைப்பட்டு சிக்கலில் மாட்டிக் கொள்கிறோம்.இதனால் தான் ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு கால் சென்டருக்குப் போவதும், பொருளாதாரம் படித்துவிட்டு அதற்குச் சற்றும் தொடர்பில்லாத அச்சகப் பணிகளுக்குப் போவதும் தொடர்கிறது. இவ்வாறு போனவர்கள் சில ஆண்டுகளில் வேலையில் ஆர்வம் குறைந்து வாழ்க்கை வெறுத்துப் புலம்பத் தொடங்கி விடுகின்றனர்.ராமனுக்காவது வழிகாட்டியாக அவனுடைய பெருந்தன்மையான முதலாளி கிடைத்தார். ஆனால் நம்மில் பலருக்கு அப்படி யாரும் இல்லை.
இதனால் இந்தப் புத்தாண்டில் யோசிப்போம். நாம் இழந்துள்ள நம்முடைய அடையாளத்தை, அடையாளமான திறமையைத் தேடுவோம். முடிந்தவரை அதற்கு உரமிட்டு நம் வாழ்வை வளமாக்க முயற்சிப்போம்...