மனிதனின் நடவடிக்கைகள் தான் புவி வெப்பமடைவதற்கு அடிப்படையான காரணி என்று, புவி வெப்பநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்டுள்ள பல்வேறு நாடுகள் அடங்கிய ஐ.நா. குழுவின் வெப்ப நிலை தொடர்பான நான்காவது ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது. வளி மண்டலத்திற்கு கார்பன்- டை-ஆக்ஸைடு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்கள் பூமியில் இருந்து கட்டுப்படுத்த இயலாத அளவு வெளியேற்றப்படுவதால், வளி மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களையும் தடுக்க இயலாமல் போய்விடும். இதனால் வறட்சி, கடல் நீர்மட்டம் உயர்தல், கடுமையான வெப்பநிலை அதிகரிப்பு, பனிச் சிகரங்கள் - துருவங்களில் பனிப்பாறை உருகுதல், வெள்ளப்பெருக்கு ஆகிய இயற்கைச் சீற்றங்களைத் தடுக்க இயலாது எனவும் எச்சரித்துள்ளனர். மனிதன் வெளியேற்றும் கரியமில வாயுக்களின் அளவு கட்டுப்படுத்தப்படும் நிலையிலும், புவி வெப்பமடைதலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு நீடிக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கோடைக்காலத்தில் ஆர்ட்டிக் துருவத்தில் உருகும் பனி சராசரி அளவைக் காட்டிலும் அதிக அளவில் உருகுவதாகவும், இதற்கு காரணம் இந்த மண்டலத்தில் தற்போது அதிகரித்துள்ள கடல் வழி போக்குவரத்து தான் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் துருவ பகுதியின் சுற்றுச்சூழலை பாதிப்பதுடன், பூமியின் சற்றுச்சூழலுக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பூமியில் இருந்து தொடர்ந்து வெளியேற்றப்படும் கரியமில வாயுக்களின் அளவால், வளி மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களினால் புவி வெப்ப நிலையில் மிகப் பெரிய அளவில் மாற்றம் உருவாகியுள்ளது. இந்த அதிகரித்து வரும் வெப்பநிலை ஆபத்தானது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்று எரிசக்தியின் உற்பத்தியும் சில விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளனர்.
மனிதர்களும், பவளப் பாறைகளும் அண்டை அயலார்கள். பவளப் பாறைகள் மாற்றத்தை முழுவதுமாக எதிர்கொள்ள இயலாது. ஹெர்ஃபஸ் கிருமிகள் தாக்கி இவை அழிந்துவிடும் நிலை ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளது. மழைபொழியும் காடுகளில் உள்ள மரங்கள் அழிவதைக் காட்டிலும் இரண்டு மடங்கு இவை வேகமாக அழிந்துவிடும் அபாயம் உருவாகியுள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. காடுகள் வேகமாக அழிந்து வருவதால் பல்வேறு உயிரினங்கள் அரிதான உயிரினங்களின் பட்டியலில் சேர்ந்து வருகின்றன. மேலும் வாழ்க்கைச் சூழல் மாறுபடும், மாசு சீர்கேடும் உயிரினங்கள் அரிதாகி வர காரணமாக அமைந்துள்ளன.
பருவநிலை மாற்றத்தின் அடுத்த விளைவு காற்று, மழைபொழிவில் உருவாகும் மாற்றம். இதனால் வறண்ட நிலங்கள் மேலும் வறட்சியையும், பனிப் பிரதேசங்கள் கூடுதல் பனிப்பொழிவையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகி வருகிறது. அண்டார்டிக்கா பனி பிரதேசம் உருகும் ஆபத்தும் வெப்பநிலை மாறுபாட்டால் ஏற்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டில் எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கும் நிலையில் 2018 ஆம் ஆண்டில் எண்ணெய் உற்பத்தி வீழ்ச்சி முதலிடத்திற்கு வந்தாலும் வரலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புவி வெப்பமடைதலால் ஏற்படவுள்ள மாற்றங்கள்:
1. தட்ப வெப்ப நிலையில் பெரும் மாற்றம்.
2. ஆர்ட்டிக் பனி பாறைகள் வேகமாக உருகுதல்.
3. வெப்பம் உச்ச அளவிற்கு அதிகரித்தல்.
4. மரபு சாரா எரிசக்தி உற்பத்தியின் எதிர் விளைவுகள்,
5. கரியமில வாயு வெளியேற்றத்தில் உயர்வு.
6. பவளப் பாறைகள் சிதையும் அபாயம்.
7. மறைந்து வரும் உயிரினங்கள்.
8. வறட்சி அதிகரிப்பு.
9. அண்டார்ட்டிக் கரடி, திமிங்கலம் போன்ற இயற்கை அதிசயங்கள் அழிவு.
10. எண்ணெய் உற்பத்தியில் உச்ச நிலை.