தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் 2007 ஆம் ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு. இந்த ஆண்டில் தமிழக அரசு தொழில் வளர்ச்சிக்காக பல்வேறு நிறுவனங்களுடன் 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளது.
இந்த தொழில்களில் மொத்தம் ரூ.70 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும். இதனால் இரண்டு லட்சம் பேருக்கு நேரடியாக புதிதாக வேலை வாய்ப்பு உருவாகும்.
தமிழகத்தில் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குதல், குடியிருப்பு, அலுவலக கட்டிடங்களை கட்டுதல், வாகன உற்பத்தி, மின்னணு மற்றம் தகவல் தொழில் நுட்பத்துறை சார்ந்த நிறுவனங்கள் முதலீடு செய்ய அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.
இதில் ஐக்கிய அரபு குடியரசை சேர்ந்த ராஸ்-அல்-கமாய்க் ஆணையம் என்ற நிறுவனம் முதலீடு செய்வதில் முதலிடத்தில் உள்ளது. இது ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு செய்ய போகிறது. இதில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலம், கோவையில் 1,000 ஏக்கரில் சர்வதேச தரத்துடன் நகரியம் அமைப்பது,
கடலூரில் நீர் விளையாட்டு, பொழுது போக்கு பூங்கா, உயர்தர குடியிருப்பு, 500 ஏக்கர் நிலப்பரப்பில் கோல்ஃப் மைதானம் அமைத்தல் ஆகியவை அடங்கும்.
இது மட்டுமல்லாமல் ஜெர்மனியைச் சேர்ந்த பி.எம்.டபிள்யூ.வின் வாகன தொழிற்சாலை, மோசர் பேர் நிறுவனத்தின் கம்பேக்ட் டிஸ்க், சி.டி. ( குறுந்தகடு ) போன்றவற்றை தயாரிக்கும் தொழிற்சாலை, ஜிந்தால் குழுமத்தின் உருக்கு தொழிற்சாலை ஆகிய தொழில் திட்டங்களில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளது.
சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூர் முதல் ஒரகடம் வரை உள்ள பகுதியில் மட்டும் ரூ.9 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. இங்கு செல்போன் தயாரிக்கும் நோக்கியா நிறுவனத்திற்கு உதிரி பாகங்கள் தயாரித்து வழங்கும் துணை நிறுவனங்கள் வாயிலாக ரூ.3,300 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. இத்துடன் ப்ளஸ்டிரானிக்ஸ் நிறுவனம் ரூ.2,500 கோடி முதலீடு செய்ய உள்ளன.
தமிழக அரசும், தமிழ்நாடு தொழில் முதலீடு மேம்பாட்டு கழகமும் (சிப்காட்) இணைந்து ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ.1,976 கோடி செலவில் நவீன சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைக்கின்றன. அதே போல் ரூ.1,300 கோடி செலவில் ஒரகடத்திலும் நவீன சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைக்கின்றன.
இந்த பகுதியில் ஏற்கனவே இந்த ஆண்டு நோக்கியா தொழிற்சாலை ரூ.650 கோடி முதலீட்டிலும், ப்ளஸ்டிரானிக்ஸ் ரூ.450 கோடி முதலீட்டிலும், அமெரிக்க கணினி நிறுவனமான டெல் ரூ.270 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை தொடங்கி உள்ளன. இந்த பகுதியில் சுமார் ரூ.11 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் புதிய தொழில் கொள்கை முதலீடு செய்வதற்கும், புதிய தொழில்களை துவக்குவதற்கும் தமிழகம் சிறந்த இடமாக இருக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் 2011 ஆம் ஆண்டிற்குள் புதிதாக இருபது லட்சம் வேலை வாய்ப்பை உருவாக்குவது.
தற்போதுள்ள மாநிலத்தின் ஏற்றுமதியை இரண்டு மடங்காக ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடி மதிப்பிற்கு உயர்த்துவது என்ற குறிக்கோளுடன் புதிய தொழில் கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது.