2007ஆம் ஆண்டு ஜனவரியில் ஆப்ரிக்க நாடான காங்கோவில் நடந்த கோர விமான விபத்துடன் சோகமாகத் துவங்கி, பாகிஸ்தானில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவேன் என்று கூறி வந்த அந்நாட்டு முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ பயங்கரவாதிகளின் குண்டுகளுக்கு டிசம்பர் மாதம் 27ஆம் தேதி பலியானதில் முடிந்துள்ளது. இதைப்போன்ற எண்ணற்ற சோக சுவடுகளை தன்னகத்தே கொண்ட 2007ஆம் ஆண்டில் உலகளாவிய அளவில் பொதுவாகவே ஒரு அசைவற்ற நிலையே நிலவியது.
உலகம் புத்தாயிரம் ஆண்டில் அடியெடுத்து வைத்த இந்த 8 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டிலும் குறிப்பிடத்தக்க பல மாற்றங்கள் நிகழ்ந்து வந்துள்ளன. ஆனால், 2007 ஆம் ஆண்டில் உலகத்தின் போக்கில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை குறிக்கக்கூடிய எந்தவொரு பெரிய நிகழ்வும் ஏற்படாத, இருந்த நிலை மாறாத அசைவற்ற ஆண்டாகத் திகழ்ந்தது!
புத்தாயிரம் ஆண்டின் எதிர்பார்ப்புகளை மிகப்பெரிய அளவிற்கு சிதைத்த ஒரு நிகழ்வாக 2001 ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நடந்தது. ஆனால் அத்தாக்குதலிற்குப் பிறகு பயங்கரவாதத்தின் வளர்ச்சியை தடுக்கவும், அது வேரூன்றி உள்ள தளங்களைத் தகர்க்கவும் உலகளாவிய அளவிற்கு ஒரு பெரும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அது இன்று வரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
2002, 2003 ஆம் ஆண்டுகளில் உலகத்தின் அமைதிக்கு ஒரு பெரும் சவாலாகத் திகழ்ந்து வந்த பல்வேறு நீண்டகால பிரச்சனைகளுக்கு இறுதித் தீர்வு காணும் அரசியல் ரீதியான அமைதி முயற்சிகள் துவக்கப்பட்டன. பாலஸ்தீன பிரச்சனைக்கு இறுதித் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை இஸ்ரேல் உணர்ந்தது. பாலஸ்தீன மக்களும் உணர்ந்தனர். அதற்கான முயற்சியில் அமெரிக்கா தீவிர முனைப்பு காட்டியது.
அதே நேரத்தில், இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் இடையே அரை நூற்றாண்டுக் காலத்திற்கும் மேலாக நீடித்து வந்த, இரு நாடுகளுக்கும் இடையே 3 போர்கள் நடக்கக் காரணமான காஷ்மீர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண்பதற்கான முன்னெடுப்புகள் துவங்கின. இதில் குறிப்பிடத்தக்க அம்சம், பாகிஸ்தானிற்கு எதிரான ஒரு தீவிரக் கொள்கையைக் கொண்ட அரசியல் கட்சியின் தலைவராக இருந்து பிரதமர் பொறுப்பேற்ற அடல் பிஹாரி வாஜ்பாய் துணிந்து அம்முயற்சியை முன்னெடுத்தார்.
ஆக்ராவில் நடந்த அந்த முதல் முயற்சி ஏமாற்றமளிக்கும் தோல்வியில் முடிந்தாலும், அதன்பிறகு பிரதமர் வாஜ்பாயின் பாகிஸ்தான் பயணம் அமைதி முயற்சிகளுக்கு உயிரூட்டியது மட்டுமின்றி, இரு நாடுகளுக்கும் இடையிலான - காஷ்மீர் உள்ளிட்ட - அனைத்து பிரச்சனைகளுக்கும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண்பது என்பது கொள்கை அளவில் ஒப்புக்கொள்ளப்பட்டு, அதே நேரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன.
இதே காலகட்டத்தில் 20 ஆண்டு காலமாக சிறிலங்க அரசின் ஒடுக்குமுறையை அடுத்து உருவான இலங்கை இனப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என்று உலக நாடுகள் அளித்த அழுத்தத்தின் காரணமாக சிறிலங்க அரசு, புலிகளுடன் பேசுவதற்கு முன்வந்தது.
இப்படிப்பட்ட அமைதி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட அதே நேரத்தில், ஒரு மிகப் பெரும் பின்னடைவாக அமெரிக்கா உள்ளிட்ட நேச நாட்டுப் படைகள் உலகத்தின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் ஈராக்கின் மீது தாக்குதல் நடத்தி ஆக்கிரமித்தன. ஓரிரு மாதத்திற்குள் ஈராக்கை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த நேச நாட்டுப் படைகளால் உள்நாட்டில் எழுந்த எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் இன்று வரை திணறிக் கொண்டிருக்கின்றன.
உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக ஆங்காங்கு எழுந்த இன, பயங்கரவாத, ஆதிக்கவாத பிரச்சனைகளுக்கு தீர்விற்கான முன்னெடுப்பு நடந்த அதே நேரத்தில், புவி வெப்பமடைதலால் மானுடத்தின் வாழ்விற்கு எழுந்த ஒரு பெரும் அச்சுறுத்தலை உலகம் உள்ளபடியே உணர்ந்து செவிசாய்க்கத் துவங்கியது.
முன்னேற்றத்திற்காக எதையும் செய்யலாம் என்கின்ற சிந்தனை வலிமையிழந்து சுற்றுச்சூழலை காப்பாற்றினால்தான் வாழ்வு நிரந்தரம் என்கின்ற உறுதியான சிந்தனைக்கு உலக மக்கள் ஆட்பட்டனர். புவி வெப்பமடைதலிற்கான காரணிகளைக் கண்டறிந்து அவைகளைக் குறைத்து இப்புவி வாழ்க்கையைக் காப்பாற்றும் முயற்சிகளுக்கு ஜி-8 என்றழைக்கப்படும் உலகின் முன்னேறிய பெரும் நாடுகள் உரிய நடவடிக்கை எடுக்க ஒப்புக்கொண்டன.
இந்த முயற்சிகளே 2004, 2005, 2006 ஆம் ஆண்டுகளில் வலிமையாகத் தொடர்ந்தன. 2004 இறுதிகட்டத்தில் ஆழிப்பேரலை ஆசியாவின் ஒரு பகுதியை புரட்டிப் போட்டு பேரழிவை உருவாக்கியபோது அதற்கு உதவ அனைத்து நாடுகளும் முன்வந்தன. ஆழிப்பேரலையால் வாழ்விழந்த மக்களுக்கு அவர்களின் வாழ்வாதாரங்களை மீட்டுத்தர முன்னெடுக்கப்பட்ட திட்டங்களும், பணிகளும் இன்று வரை தங்குதடையின்றி நடைபெற்று வருகின்றன.
ஆனால், 2007 ஆம் ஆண்டில் கடந்த 7 ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட பெரும் முயற்சிகள் அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டு இதுவரை ஏற்பட்ட முன்னேற்றங்கள் அனைத்தும் பொருளற்றவையோ என்று எண்ணச் செய்தன.
நமது நாட்டைப் பொறுத்தவரை காஷ்மீர் பிரச்சனைக்கு இந்த ஆண்டு தீர்வை நோக்கிய செயல்பாடுகளை உறுதி செய்யும் காலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான 4 அம்ச அடிப்படையையும் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷார·ப் அளித்தார். ஆனால், பாகிஸ்தானில் தனது அதிகாரத்தை தக்கவைக்க அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளினால் ஏற்பட்ட எதிர்ப்பும், உள்நாட்டுக் கலவரங்களும், பாகிஸ்தான் அரசின் அமெரிக்க ஆதரவு போக்கை எதிர்க்கும் பயங்கரவாதிகளின் தாக்குதலும் காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காணும் நடவடிக்கையில் ஒரு அடி கூட முன்னேறவிடாமல் தடுத்துவிட்டன. பாகிஸ்தானில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தின் காரணமாக இந்திய அரசும் காஷ்மீர் பிரச்சனையில் தீவிரம் காட்டுவதை தவிர்த்தது.
கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே ரயில் போக்குவரத்து, பேருந்து போக்குவரத்து, வர்த்தக, வணிக மேம்பாடு ஆகியவற்றில் காணப்பட்ட வேகம், இந்த ஆண்டு சுத்தமாக இல்லாமல் போனது.
இலங்கை இனப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள், சிறிலங்க அரசின் ராணுவ முனைப்பு நடவடிக்கையால் முட்டுக்கட்டையானதற்குப் பிறகு, இந்த ஆண்டில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக, அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை என்று அறுதியிட்டுக் கூறும் அளவிற்கு அதிபர் ராஜபக்சே அரசு ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. அதன் எதிர்வினையாக தங்களுடைய ஆயுத வலிமையைக் கொண்டு விடுதலைப் புலிகளும் பதிலடி கொடுத்ததையடுத்து, இதற்குமேல் இலங்கை இனப்பிரச்சனைக்கு உள்நாட்டுப் போரே தீர்வை அளித்தாக வேண்டும் என்கின்ற நிலை இந்த ஆண்டுதான் உருவானது.
சிறிலங்க விமானப்படையின் அனுராதபுரம் படைத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டுப் போர் விமானங்களை விடுதலைப் புலிகள் நிர்மூலமாக்கியதையடுத்து, சிறிலங்க விமானப்படை விமானங்கள் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டது இருதரப்பும் அமைதிப் பேச்சுக்கு மீண்டும் திரும்புவதற்கான சாத்தியத்தை அடியோடு அடைத்தது.
இனப்பிரச்சனைக்கு ராணுவ நடவடிக்கைகளின் மூலம் தீர்வு காணும் வாய்ப்பு உருவாகியுள்ளதாக நேற்று அதிபர் ராஜபக்சே கூறியிருப்பது அடுத்த ஆண்டிலும் இலங்கைத் தீவில் பெரும் ரத்தக்களறி ஏற்படப் போவதை முன்னறிவித்தது.
பாலஸ்தீனப் பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண பலமுறை முயன்ற அமெரிக்கா, இப்பொழுதும் அதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. 1978 ஆம் ஆண்டு பாலஸ்தீனப் பிரச்சனைக்குத் தீர்வு காண கேம்ப் டேவிட் பேச்சுவார்த்தையை முன்னெடுத்தார் அன்றைய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர். ஆனால், இஸ்ரேலின் பிடிவாதப் போக்கால் தீர்வு காண முடியவில்லை. இன்று அதேபோன்றதொரு முயற்சியில் அமெரிக்க அதிபர் புஷ் ஈடுபட்டுள்ளார். இந்நடவடிக்கையில் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் தீவிரம் காட்டி வருகிறார். ஆனால், அமெரிக்கா உருவாக்கி இஸ்ரேல் ஏற்கக் காத்திருக்கும் தீர்வுத் திட்டத்தை பாலஸ்தீனம் ஏற்க மறுக்கிறது.
மேற்குக் கரை, காசா, கோலன் மலை என்று 3 பிரிவுகளாக ஒட்டற்றுப் பிரிந்து கிடக்கும் பகுதிகளை பாலஸ்தீனம் என்று ஏற்றுக்கொள்ள தாங்கள் தயாராகயில்லை என்று பாலஸ்தீனர்கள் கூறி வருகின்றனர். எனவே இந்த முன்னெடுப்பும் தோல்வியில்தான் முடியும் என்பதில் சந்தேகமில்லை.
நமது நாட்டின் பொதுவான அரசியல் போக்கும் இந்த ஆண்டு மிக நிலையற்றதாக இருந்தது. நமது நாட்டின் எரிசக்தித் தேவையைக் கருத்தில் கொண்டு அமெரிக்காவுடன் செய்துகொண்ட அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை இடதுசாரிகள் ஏற்க மறுத்ததையடுத்து மத்திய அரசிற்கு பின்னடைவு ஏற்பட்டது.
நாடாளுமன்றத்திற்கும், நீதித்துறைக்கும் இருந்து வரும் அதிகாரப் பகைமை இந்த ஆண்டு மேலும் வலுத்தது. இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு மத்திய அரசின் உயர் கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு அளிக்க வகை செய்து நிறைவேற்றப்பட்ட சட்டத்தை முழு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு முன்னரே அதனை நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தடை விதித்தது, அரசியல் அதிகாரத்தைவிட, நீதித்துறையின் அதிகாரம் வலுவானதா என்பதனை பலப்பரிட்சைக்கு உட்படுத்தும் செயலாக கருதப்பட்டது.
அரசின் நிர்வாகம், செயற்பாடு ஆகியவற்றில் நீதிமன்றங்களின் உத்தரவுகள் பெரும் தலையீடாக உள்ளது என்றும், அது அரசமைப்பு அதிகாரம் உருவாக்கியுள்ள சமநிலையை சீர்குலைத்துவிடும் என்றும் நீதிபதிகள் ஏ.கே. மாத்தூர், மார்கண்டேய கட்ஜூ ஆகியோர் கொண்ட நிதிமன்ற அமர்வு கூறிய கருத்து, நாடாளுமன்ற - நீதிமன்ற மோதலில் ஒரு திருப்புமுனையை உருவாக்கியது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலைத் தொடர்ந்து தி.மு.க. அரசமைந்த நாள் முதல் அதன் தோழமைக் கட்சியான பா.ம.க.விடம் இருந்து அது எதிர்கொள்ளும் எதிர்ப்பின் காரணமாக பல திட்டங்களை கைவிடும் நிலைக்கு ஆளாகியுள்ளது. இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து முடியும் வரை தமிழ்நாட்டு அரசியலில் ஒரு நிலையற்ற தன்மையே நீடித்து வருகிறது.
பொருளாதார ரீதியாக தமிழ்நாட்டிலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் தொழில் வணிகத் துறைகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும் விவசாயம் உள்ளிட்ட அடிப்படைத் தொழில்களில் வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்க அளவிற்கு இல்லை என்பதோடு, விவசாயிகள், கைவினைஞர்கள் ஆகியோரின் அன்றாட வாழ்க்கை பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்த நிலை இந்த ஆண்டும் மாறாமல் தொடர்ந்தது.
ஒட்டுமொத்தமாக, வளர்ச்சி ரீதியிலான பெருத்த மாற்றங்கள் ஏதுமற்ற ஒரு சுணக்கமான மந்தமான ஆண்டாகவே தொடங்கி முடிந்துள்ளது 2007.