2007ம் ஆண்டு சோதனைகள் பலவற்றை சந்தித்தாலும், இந்திய கிரிக்கெட் ஒட்டுமொத்தமாக பலமான திசையில் சென்று கொண்டிருக்கிறது எனலாம்.
உலகக் கோப்பை தோல்விகளுக்கு பிறகு பி.சி.சி.ஐ.-க்கு போட்டியாக இந்திய கிரிக்கெட் லீக் என்று தனியார் நிறுவனம் ஒரு பூதத்தை கிளப்ப பல வீரர்கள் அதில் ஒப்பந்தம் செய்து கொண்டனர். இதில் உள் நாட்டு இளம் வீரர்கள் சிலர் சேர்ந்ததும் நடந்தது. அதனை பி.சி.சி.ஐ. வன்முறையாக தடை செய்தது, அதில் சேரும் வீரர்கள் உள் நாட்டு கிரிக்கெட்டில் விளையாட முடியாது என்று கூறியது பிசிசிஐ-யின் எதேச்சதிகாரப் போக்கை காட்டுவதாய் அமைந்தது.
2007 என்றாலே நமக்கு இரண்டு எதிரெதிர் கணங்கள் நினைவுக்கு வரும். ஒன்று மேற்கிந்திய தீவுகளில் நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுடன் தோல்வி தழுவி முதல் சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக வெளியேறியது. இரண்டாவது அதனை மறக்கடிக்கும் விதமான இருபதுக்கு 20 உலகக் கோப்பை வெற்றி.
இவற்றுக்கிடையில் ஏகப்பட்ட குழப்பமான விஷயங்கள் நடந்து விட்டன. உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு ஏற்பட்ட சர்ச்சைகள் ஒரு புறம்.. கிரேக் சாப்பல் இந்திய வீரர்கள் மீது குறிப்பாக மூத்த வீரர்களை மாஃபியா என்று அழைத்தது... அதற்கு சச்சின் டெண்டுல்கர் காட்டமாக பதிலளித்தது... இதனால் சாப்பல் பயிற்சிப் பொறுப்பை விட்டு ஓடியது... என்று ஒரு ரத்தமற்ற ரணகளமே நடந்து விட்டது.
ஊடகங்களில் மூத்த வீரர்கள் பற்றிய சாப்பலின் கருத்திற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் எழுதியது இவையெல்லாம் இந்திய கிரிக்கெட் இதுவரை சந்தித்திராத புதிய சர்ச்சைகள் என்பது குறிப்பிடத் தக்கது.
ஊடகங்களின் வலையில் தான் சிக்கியதாக சாப்பல் தெரிவித்தாலும் தனது சொந்த கருத்துகளை ரகசியமாக ஊடகங்களுக்கு கசிய விடும் வேலையையும் அவர் செய்து கொண்டிருந்தார். அதன் பலனை அனுபவித்தார்.
webdunia photo
WD
ஆனால் சாப்பல் பயிற்சியில் இருந்தபோது, ஜனவரி 2007ல் மேற்கிந்திய தீவுகளை இந்தியா ஒரு நாள் தொடரில் வென்றது.
அதன்பிறகுதான் உலகக் கோப்பை அதிர்ச்சித் தோல்வி. பயிற்சியாளர் விலகிவிட்ட நிலையிலும் சர்ச்சைகளும், கண்டனங்களும் சூழ மனோ தைரியத்தை இழந்த இந்திய அணியின் தற்காலிக மேலாளர் பொறுப்பை ரவி சாஸ்திரி ஏற்றார்.
வங்கதேசத்தில் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரை இந்தியா வென்றது. அதன்பிறகு அயர்லாந்து பயணம் அங்கு அயர்லாந்து அணியுடன் ஒரே ஒரு நாள் போட்டியை வென்ற பிறகு, தென் ஆப்பிரிக்க அணியை 3 ஒரு நாள் போட்டிகள் தொடரில் சந்தித்தது. முதல் ஒரு நாள்போட்டியில் இந்தியா தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றது.
2வது ஒரு நாள் போட்டியில் 226 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்காவை சுருட்டிய இந்திய அணி டெண்டுல்கரின் அதிரடி 93 ரன்களுடன் வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே பறிகொடுத்து வெற்றி பெற்றது.
3வது ஒரு நாள் போட்டி மழை காரணமாக 31 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்கா இதில் 148 ரன்களை எடுத்தது. யுவ்ராஜ் சிங் மற்றும் திராவிடின் அபார ஆட்டத்தால் இந்தியா வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்க அணியுடன் முதன் முதலாக தொடரை வென்றது.
அதன் பிறகு அதன் பிறகு அப்படியே இங்கிலாந்து வந்த இந்திய அணி, அங்கு லார்ட்சில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இரண்டாவது இன்னிங்சில் 9 விக்கெட்டுகளை இழந்து தோல்வி உறுதி என்ற நிலையிலிருந்து மழை காரணமாக தப்பியது.
இரண்டாவது டெஸ்டில் ஜாகீர் கான் மற்றும் அனில் கும்ப்ளே அபாரமாக பந்து வீசி இங்கிலாந்து அணியை முதல் இன்னிங்சில் 198 ரன்களுக்கு சுருட்டினர். இந்தியா தனது முதல் இன்னிங்சில் ஜாஃபர், கார்த்திக் அபார துவக்கத்துடன் சச்சின், கங்குலி, லக்ஷ்மண் ஆகியோரின் அரைசதங்களுடன் 481 ரன்களை குவித்தது.
2வது இன்னிங்சில் இங்கிலாந்து 355 ரன்களுக்கு சுருண்டது. ஜாகீர் கான் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்தியா வெற்றிபெறத் தேவையான 73 ரன்களை எடுத்து வெற்றியை சாதித்தது. பிறகு 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபாரமாக பேட் செய்தது. பலர் சதத்தை தவறவிட அனில் கும்ப்ளே தன் வாழ் நாள் சாதனை இன்னிங்சை ஆடி சதமெடுத்தார். இன்னொரு முனையில் தோனி இங்கிலாந்து வீச்சாளர்களை நாலாபக்கமும் சிதற அடித்தார் இந்தியா 664 ரன்கள் எடுத்தது.
பிறகு ஜாகீர், ஸ்ரீசாந், கும்ப்ளே அபாரமாக வீசி இங்கிலாந்தை 345 ரனகளுக்கு சுருட்டினார்கள். ஃஆலோ ஆன் கொடுத்து இங்கிலாந்தை வீழ்த்தும் முடிவை இந்தியா எடுக்கும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் டிராவிட் அதிர்ச்சிகரமாக மீண்டும் இந்திய அணியை பேட் செய்ய வைத்தார்.
ஆட்டம் மந்தமான டிராவாக முடிந்தது. இது பெரிய சர்ச்சையை கிளப்பிவிட்டது. ஃபாலோ ஆன் கொடுக்காததற்கு பந்துவீச்சாளர்கள் களைப்பாக இருந்ததே காரணம் என்று டிராவிட் கூறினார், ஆனால் ஜாகீர் கான் அதனை மறுத்தார்.
இந்த சர்ச்சை தீரும் முன்னர் நாட்வெஸ்ட் ஒரு நாள் தொடர் தொடங்கிவிட்டது முதல் 6 போட்டிகளில் 3- 3 என்று இந்தியா டிரா செய்தது. சில அபாரமான கிரிக்கெட்டை இந்தியா ஆடியது.
webdunia photo
WD
இறுதி ஒரு நாள் போட்டியில், தன்னம்பிக்கையுடன் களமிறங்கிய இந்திய அணியை நடுவர் அலீம் தாரின் ஒரு தவறான முடிவு குலைத்தது. நல்ல ஃபார்மில் இருந்த சச்சினுக்கு மிகத் தவறாக அவுட் கொடுத்தார் அலீம் தார். இதனால் இந்திய அணி 187 ரன்களுக்கு சுருண்டது. பீட்டர்சன் மற்றும் காலிங்வுட் அரிதான இங்கிலாந்து தொடர் வெற்றியை பெற்று கொடுத்தனர்.
அந்த தொடர் முடிந்ததும் மீண்டும் இருபதுக்கு 20 உலகக் கோப்பை தென் ஆப்பிரிக்காவில். சச்சின், டிராவிட், கங்கூலி விலகிக் கொள்ள, அரிதான சில இளம் வீரர்கள் இந்திய அணிக்கு வந்தனர். அவர்களின் வேகத்தையும் தைரியத்தையும் பிரதிபலிக்கும் விதமான அணித் தலைமை பொறுப்பு தோனியிடம் வந்து சேர்ந்தது.
அவரும் அதற்கு சரியான பரிசை பெற்றுத் தந்தார். வரலாற்றின் முதல் இருபதுக்கு 20 உலகக் கோப்பையை இந்தியா வென்றது. இதில் குறிப்பாக யுவ்ராஜ் சிங் இங்கிலாந்து வீரர்களின் மைதான வசைகளுக்கு ஸ்டூவர்ட் பிராடின் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை அடித்து பதிலடி கொடுத்தது, அரையிறுதியில் ஆஸ்ட்ரேலிய அணியை சகல விதத்திலும் ஆதிக்கம் செலுத்தியது, பாகிஸ்தானுடன் இறுதிப் போட்டியில் நெருக்கடியான கடைசி ஓவரில் அனுபவமில்லாத ஜொஹிந்தர் ஷர்மாவிட்ம் பந்தை கொடுத்து வெற்றிக்கு அழைத்துச் சென்றது... என்று தோனியின் தலைமையில் இந்தியா மீண்டும் தனது உச்சத்தை எட்டியது.
webdunia photo
WD
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் 1983ற்கு பிறகு விழாக்கோலம் பூண்டனர். பலமான கொண்டாட்டங்கள் நாடு முழுதும் நடந்தேறியது. 2007 ல் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக அது அமைந்தது.
பிறகு மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியது, டிராவிட் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகினார். அதற்கான காரணம் இன்று வரை மர்மமாகவே உள்ளது. ஒரு நாள் போட்டிகளுக்கு தோனி கேப்டன் பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.
அவருக்கு எடுத்த எடுப்பிலேயே ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக 7 ஒரு நாள் போட்டிகளை சந்திக்க வேண்டிய நிலை. அந்த ஒரு நாள் தொடரில் இந்திய 2- 4 என்று வெற்றிபெற்றதே பெரிய விஷயம். பிறகு இருபதுக்கு 20 போட்டியில் மீண்டும் ஆஸ்ட்ரேலியாவை மண்ணைக் கவ்வ வைத்து தங்களது உலகக் கோப்பை சாம்பியன் வெற்றி அதிர்ஷ்டத்தில் வந்ததில்லை என்று இந்திய அணி நிலை நிறுத்தியது.
டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக சச்சின் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் மறுத்து விடவே அனில் கும்ப்ளே தேர்வு செய்யப்பட்டார். இவரும் தோனி போலவே, தன்னம்பிக்கையுடன் ஆடி பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு நாள் மற்றும் 21 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியுள்ளார்.
2007 உலகக் கோப்பை தோல்விகளுக்கு பிறகு மூத்த வீரர்களும் சில இளம் வீரர்களும் புதிய வேகப்பந்து வீச்சளர்களும் இந்திய அணியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு திருப்பியுள்ளனர். சாப்பல் பயிற்சியாளராக இருந்தபோது ஏற்பட்ட வீழ்ச்சியிலிருந்து பயிற்சியாளர் இல்லாமலேயே மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது இந்திய வீரர்களின் போர்க் குணத்தை காட்டுகிறது.
2007 என்றாலே தென் ஆப்பிரிக்க வெற்றி, சச்சின் தவற விட்ட சதங்கள், யுவ்ராஜ் சிங்கின் 6 சிக்சர்கள், கங்குலியின் அபாரமான ஆட்டங்கள், அனைத்திற்கும் மேலாக இருபதிற்கு 20 உலகக் கோப்பை வெற்றி நம் நெஞ்சங்களில் நீங்காமல் இடம்பெற்றுள்ளது.
2007 இறுதியில் டிசம்பர் 26 ஆம் தேதி ஆஸ்ட்ரேலியாவை மெல்போரினில் இந்தியா எதிர்கொள்கிறது. இது இந்த ஆண்டின் கடைசி டெஸ்ட். இதில் வெற்றிபெற்றால் அதுவே இந்த ஆண்டின் சிறந்த வெற்றி எனலாம்.
இந்திய கிரிக்கெட் 2007ல் பிரகாசித்துள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.