ஆஸ்திரேலியாவின் பிரிஸ்போன் பகுதியை சேர்ந்தவர் யராக்கா பெய்ல்ஸ். இவரது ஒன்பது வயது மகன் குவாடன். உடல் நல குறைபாடு உடைய இவர் அங்குள்ள சாதாரண மக்கள் படிக்கும் பள்ளியிலேயே படித்து வருகிறார். குள்ளமான உடலமைப்போடி இருக்கும் குவாடனை அங்குள்ள மற்ற சிறார்கள் ஒதுக்கி வைப்பதாகவும், அடிக்கடி துன்புறுத்துவதாகவும் அவரது தாய் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் கதறி அழும் சிறுவன் குவாடன் தன்னை மற்றவர்கள் மிகவும் துன்புறுத்துவதாகவும், தான் இறந்து விட்டால் நிம்மதியாக இருக்கும் எனவும் கூறியுள்ளான். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி உலகம் முழுவதும் உள்ளோரை கலங்கடித்துள்ளது.
சிறுவன் குவாடனுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக குவாடனுடன் நாங்கள் இருக்கிறோம் என பல பிரபலங்கள் வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர். வுல்வரின் பட புகழ் ஹூஜ் ஜாக்மேன், கூடைப்பந்து வீரர் எனெஸ் காட்னர் உள்ளிட்ட பலர் குவாடனுக்கு ஆதரவாக வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். ஹூஜ் ஜாக்மேன் ‘இனி நானும் உனது நண்பன்’ என கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.