கொரோனா பெருந்தொற்று நோயாக அறிவிப்பு: முடங்கிய நாடுகள்!

Webdunia
வியாழன், 12 மார்ச் 2020 (08:55 IST)
உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொண்டுள்ள கொரோனா வைரஸ் ஒரு பெருந்தொற்று நோயாக உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு இடத்தில் இருந்து குறிப்பிட்ட காலத்திற்குள் மிக வேகமாக பரவி பல நாட்கள் நீடிக்கும் நோய்கள் பெருந்தொற்று நோய்கள் எனப்படுகின்றன. இந்த வகை பெருந்தொற்று வியாதிகள் பலவற்றிற்கு சரியான மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் இந்த நோய்கள் எப்போது முழுவதுமாக நீங்கும் என்பதையும் அவதானிக்க முடியாது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸும் அப்படியான பெருந்தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பெருந்தொற்று நோயாக அறிவிக்கப்பட்ட எய்ட்ஸ் நோய் இன்று வரையிலுமே பலருக்கும் பரவி வருவதோடு 3 கோடி பேரை பலி கொண்டுள்ளது. இதற்கு முன்னர் உலகளாவிய அளவில் வேகமாக பரவி பல உயிர்களை பலி கொண்ட பிளேக், பெரியம்மை போன்றவையும் பெருந்தொற்று நோயாக அறிவிக்கப்பட்டன.

தற்போது கொரோனா பெருந்தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ளதால் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகள் எமெர்ஜென்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இத்தாலியில் மருந்து கடைகள் மற்றும் சில உணவு கடைகள் தவிர்த்து வணிக வளாகங்கள், நிறுவனங்கள், திரையரங்குகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மக்கள் வீட்டை விட்டு தேவையில்லாமல் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில உலக நாடுகளும் இதே முறையை பின்பற்றுவதற்கான ஆயத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்