அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகரும், கணங்களுக்கெல்லாம் அதிபதியும், விக்கினங்கள் யாவற்றையும் நீக்கி பக்தர்கள் வேண்டும் வரங்களை வாரிவழங்கும் வள்ளலுமாகிய விநாயக பெருமானை விநாயகர் சதுர்த்தி அன்று நோன்பிருந்து வணங்கி பேரருள் பெற்று உய்வோமாக. இஷ்ட சித்திகளைப் பெற, நினைத்த காரியசித்தியைப் பெற விரும்புவோர் இவ்விரதத்தைக் கைக்கொள்ளலாம்.
அதிகாலை துயிலெழுந்து நீராடி நித்திய கர்மாநுஷ்டானங்களை முடித்துக் கொண்டு பிரார்த்தனை வழிபாடுகள், ஆலய தரிசனம் முதலியவற்றில் ஈடுபடவேண்டும். மத்தியானம் ஒரு பொழுது உண்ணலாம். நல்லெண்ணெய் சேர்க்கக்கூடாது என்பது விதி. இரவு பட்டினி இருக்க முடியாதவர்கள் பால்பழம் அல்லது பலகாரம் உண்ணலாம்.
வீட்டிலே பூஜை வழிபாடுகளுடன் விரிவாக இந்த விரதமிருக்க விரும்புவோர் வீட்டிற்கு ஈசான திக்கில் பசும்சாணியால் மெழுகித் தூய்மையாக்கப்பட்டு வெள்ளைகட்டித் தயார் செய்யப்பட்ட ஓரிடத்தில் அல்லது பூஜை அறையிலே மாவிலை தோரணங்களாலும் சிறிய வாழைமரம் முதலியவற்றாலும் அலங்கரித்து அங்கு ஐந்து கும்பங்களை முறைப்படி ஸ்தாபித்து சித்த கணபதி, வித்தியா கணபதி, மோஷ கணபதி, மஹா கணபதி ஆகிய மூர்த்திகளைப் பிரதிஷ்டை செய்து பூஜைகளை நடத்தலாம்.
தத்தமக்குரிய புரோகிதரை அல்லது அருகிலுள்ள ஆலய அர்ச்சகரை அழைத்து இந்தப் பூஜையைச் செய்விக்கலாம். சங்கல்பத்துடன் ஆரம்பித்து பிராமண அநுக்ஜை, விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், பஞ்சகவ்யபூஜை முதலிய பூர்வாங்கக் கிரியைகளிலிருந்து ஆவாஹனாதி சர்வோபசார பூஜைகளையும் செய்து தீபாராதனை நமஸ்காரங்களுடன் நிறைவு செய்யலாம்.