கச்சத்தீவை திரும்பப் பெற முடியாது: எஸ்.எம். கிருஷ்ணா மீண்டும் திட்டவட்டம்

செவ்வாய், 31 ஆகஸ்ட் 2010 (19:42 IST)
இலங்கைக்கு தாரை வார்த்த கச்சத்தீவை மீண்டும் திரும்பப் பெற முடியாது என இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் தொடர்பாக மக்களவையில் இன்று திமுக தலைவர் டி.ஆர்.பாலு கவன தீர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார்.

இத்தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தின்போது, திமுக, அதிமுக உள்பட தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் கச்சத்தீவை திரும்பப் பெறுமாறு கட்சி வேறுபாடின்றி குரல் கொடுத்தனர்.

இந்நிலையில் இந்த விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய எஸ்.எம்.கிருஷ்ணா கச்சத்தீவு, "இலங்கைக்கே சொந்தம். அதை திரும்பப் பெற முடியாது. இரு அரசுகளுக்கிடையிலான அந்த புனிதமான ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது. இலங்கை, நமது நட்பு நாடு. அந்த அம்சத்தை மனதில் கொள்வது அவசியம்" என்று திட்டவட்டமாக கூறினார்.

மேலும் இலங்கை கடல் பகுதிக்குள் நுழைய வேண்டாம் என்று தமிழக மீனவர்களுக்கு அடிக்கடி அறிவுரை கூறியுள்ளதாகவும் . தற்போது இப்பிரச்சினையை தீர்க்க, இந்திய-இலங்கை மீனவ சங்கங்களிடையே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கிருஷ்ணா தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்