தலைநகர் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது ஏன்? : ஒரு அலசல்
செவ்வாய், 17 மே 2016 (16:25 IST)
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், தலைநகர் சென்னையில் மிகக்குறைந்த அளவு வாக்குப்பதிவு பதிவாகியிருக்கிறது.
தமிழகம், புதுச்சேரி, கேரள மாவட்டங்களில் நேற்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
தமிழகத்தில், அரவங்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தவிர மற்ற 232 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. தமிழகத்தில் 74 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவானது. மீதி 26 சதவீத மக்கள் வாக்களிக்கவில்லை.
2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது 78.02 சதவித வாக்குகள் பதிவானது. அதன்பின் இந்த 5 ஆண்டுகளில் நிச்சயமாக புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கும். அப்படிப் பார்த்தால் 2011ஆம் ஆண்டை விட, இந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு அதிகமாக பதிவாகியிருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை.
அதுவும் முக்கியமாக சென்னையில் வெறும் 60 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. மயிலாப்பூர் தொகுதியில் 55 சதவீத வாக்குகளும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் 67 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.
இந்த முறை 100 சதவீத வாக்குப்பதிவு என்ற கோஷத்துடன் களம் இறங்கியது தேர்தல் ஆணையம். பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதற்காக ரூ.38 லட்சம் செலவு செய்தது. ஆனாலும் அது பெரிய பலனை தரவில்லை.
எனவே இதுபற்றி தகுந்த விசாரணை நடத்தப்படும் என தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தற்போது தெரிவித்துள்ளார்.
சென்னையில் மிகக்குறைவான வாக்குகள் பதிவானதற்கு நிறைய காரணங்கள் கூறப்படுகிறது.
1. கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் கன மழை பெய்து, ஏரிகள் திறக்கப்பட்டு, அதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால், அவதிப்பட்டதை சென்னை மக்கள் இன்னும் மறக்கவில்லை. மேலும், தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் இளைஞர்களே அதிக அளவில் மக்களுக்கு உதவினர். அது அரசியல் கட்சிகளின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கலாம்.
2. சனி,ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை கிடைத்ததால், ஓட்டுப்போடுவதை தவிர்த்து விட்டு ஏராளமானோர் சுற்றுலா சென்று விட்டனர்.
3. வெளியூரிலிருந்து சென்னை வந்து இங்கு செட்டிலானவர்கள்தான் அதிகம். எனவே அவர்கள தங்களின் சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.
4. அதிலும் சிலருக்கு சென்னை மற்றும் அவர்களின் சொந்த ஊர் என இரண்டு இடங்களிலும் வாக்கு இருக்கிறது. தேர்தல் ஆணையம் இன்னும் அதை சரி செய்யவில்லை. எனவே அவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு சென்று வாக்களித்திருக்கக் கூடும்.
5. மழை வெள்ளத்தில் பெரும் பாதிப்புகளை சந்தித்த அடையாறு, சைதாப் பேட்டை கூவம் நதியோரம் வசித்த மக்கள், தற்போது சென்னைக்கு வெளிப்புறம் குடி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யாரும் இந்த முறை வாக்களிக்கவில்லை.
6. எல்லாவற்றுக்கும் மேல், யாருக்கு வாக்களித்து என்ன ஆகப்போகிறது என்று நினைத்து, வாக்களிக்காமல் இருக்கும் மேல் தட்டு வர்க்கத்தினர் சென்னையில் மிக மிக அதிகம்.
இப்படி எல்லா காரணங்களும் சேர்ந்து, சென்னையில் வாக்குப்பதிவை பாதித்திருக்கிறது என்று கூறப்படுகிறது.