விதிமுறை 333 - வள்ளுவர் வழியில் ஒரு ஃபார்முலா

தேமொழி
புதன், 27 ஆகஸ்ட் 2014 (15:07 IST)
மூன்று...மூன்று...மூன்று… இப்படி எழுதினால் மூன்று வார்த்தைகள் தேவையில்லாமல் அதிகப்படியாக எழுதப்பட்டுவிட்டது. இந்நூற்றாண்டில் பல திசைகளில் இருந்தும் செய்திகள் குவிவதால் மக்களுக்கு அவற்றைப் படிப்பதற்கு நேரம் இருப்பதில்லை.
 
நம் கருத்து மிக முக்கியமானது, அது அடுத்தவரைச் சென்று சேரவேண்டும் என்றால் இருக்கும் ஒரே வழி சுருங்கச் சொல்வதே. தேர்வுகளில் 300 வார்த்தைகளுக்கு மிகாமல் பத்தியளவு பதில் எழுத வேண்டிய வினாக்கள் உண்டு.
 
இக்காலத் தலைமுறையினரின் கைப்பேசிகளில் செய்திகள் அனுப்பும் பழக்கத்தால் ஆங்கிலம் சிதைகிறது என்பது ஆங்கில மொழி ஆசிரியர்களின் கவலை. ஆனால் அவர்களே KISS (Keep it simple, stupid) என்று தேர்வுத் தாளில் குறிப்பெழுதினால் நாம் ROFL (Rolling On The Floor Laughing) செய்வதைத் தவிர வேறு வழியில்லை.
 
குறைந்த அளவில் சொல்லி நிறைந்த பொருள் தரும் கருத்தை எழுத வேண்டும் என்ற உண்மையைத் தெரிந்திருந்த ஒரே தமிழர் வள்ளுவர்தான்.  "உங்கள் செய்தியை 140 எழுத்துகளுக்குள் சொல்லவும்" என்ற இக்காலத்திற்கேற்ற நடவடிக்கையை எடுத்த 'டுவிட்டர்' சமூக வலைத்தளக்  கொள்கையை அன்றே கடைப்பிடித்திருக்கிறார். 
 
"சொல்வன்மை" என்ற அதிகாரம் வைத்து, அதில் ஒரு பத்து குறளையும் இதற்காக ஒதுக்கியவர் வள்ளுவர். 
கீழே இரு குறள்கள் அவர் சொல்வன்மை பற்றிக் கொண்டிருந்த கொள்கையைக் காட்டுகிறது.
 
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் 
வேட்ப மொழிவதாம் சொல்.  - குறள் 643
 
(character with spaces 62)
 
உரை: 
சொல்லும் போது கேட்டவரைத் தன் வயப்படுத்தும் பண்புகளுடன், கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும்.
 
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற 
சிலசொல்லல் தேற்றா தவர்.  - குறள் 649
 
(character with spaces 54)
 
உரை: 
குற்றமற்றவையாகிய சில சொற்களைச் சொல்லத் தெரியாதவர், உண்மையாகவே பல சொற்களைச் சொல்லிக்கொண்டிருக்க விரும்புவர்.
 
இக்கால மக்களின் கவனத்தை ஈர்க்கப் போட்டிகள் பல உள்ளன, நாமும் நம் கருத்துகள் அடுத்தவரை அடைய வேண்டும் என்று விரும்பினால், கேட்பவரது அல்லது படிப்பவரது கவனச் சிதறலைத் தவிர்க்க விரும்பினால்... விதிமுறை 333 (ஃபார்முலா 333) என்பதைக் கடைப்பிடிக்க வேண்டும்.
 
மக்களிடம் ‘கவனிக்கும் நேரம்’ குறைந்துகொண்டே வருகிறது. நம் மூதாதையர்கள் போல நமக்குப் பெரிய நூல்களைப் படிக்கவோ, நீண்ட திரைப்படங்களைப் பார்க்கவோ பொறுமை இல்லை. "யூடியுப்" காணொலி வலைத்தளத்தில் நாம் முதலில் நோட்டமிடுவது ஒரு காணொலியின் நீளம் என்ன என்பதைத்தான்.

அதிக நீளம் உள்ள காணொலி என்றால் பிறகு பார்க்க வேண்டிய பட்டியலில் தள்ளி வைக்கப்படும். மிக நீளமான மின்னஞ்சல்கள் என்றால் பிறகு நேரம் கிடைக்கும் பொழுது படிக்க வேண்டிய கோப்பில் தொகுத்து வைக்கப்படுகின்றன. இவை யாவும் பிறகு நமது கவனத்தைப் பெறாமலேதான் போகின்றன.  
 
நாம் தலைப்புச் செய்திகளை மட்டுமே படிக்கும் தலைமுறை அல்லவா? ஒருவரின் சராசரி கவனிக்கும் காலம் 10 வினாடிகள்தானாம்.  
 
விளம்பரதாரர்களும் தங்கள் பொருளை விற்கும் செய்தியை இக்கால அளவிற்குள் சொன்னால்தான் தகவல் நுகர்வோரைச் சென்றடையும் என்ற அடிப்படையை அறிந்து, தங்கள் விளம்பரங்களை உருவாக்குகிறார்கள். சராசரி யூடியுப் காணொலிகளின் நீளம் சற்றேறக் குறைய 4 நிமிடங்கள்.
 
நம்மைப் போலத்தானே பிறரும்; எனவே நாம் ஒரு செய்தியைச் சொல்ல விரும்பினால் விதிமுறை 333ஐக் கடைப்பிடிப்போம்.  
 
செய்திகளின் வரம்பு 333 வார்த்தைகள்.
காணொலியின் வரம்பு 3:33 நிமிடங்கள், பாடல்களுக்கும் அதே வரம்புதான்.
இக்கட்டுரையின் சொற்களின் எண்ணிக்கையும் 333தான்.