அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம் மற்றும் விவேகம் என தொடர்ச்சியாக 3 படங்களில் நடித்தார். அதில் வீரமும், வேதாளமும் சூப்பர் ஹிட்டாகி அஜித்தின் படத்திற்கு வெகு நாட்களுக்குப் பிறகு குடும்ப ரசிகர்களை வரவைத்தது. கடைசியாக வெளியான விவேகம் கலவையான விமர்சனங்களைப் பெற்று சுமாராக ஓடியது. அதனால் அந்த படத்தைத் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸுக்கும், வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. அந்த நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக நடிகர் அஜித் குறைந்த சம்பளத்தில் மீணிடும் அதே தயாரிப்பாளருக்கு படம் ஒப்புக்கொண்டு விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை எப்படியும் ஹிட் ஆகவேண்டுமென்ற கட்டாயத்தில் சிறுத்தை சிவா மற்றும் படக்குழுவினர் மும்முரமாக வேலை செய்து வருகினறனர். அஜித் –சிறுத்தை சிவா காம்போவின் முந்தையப் படங்களில் பணிபுரிந்த அதே தொழில்நுட்பக் கலைஞர்களே இந்தப் படத்திலும் பணிபுரிகின்றனர். ஆனால் இசையமைப்பாளராக இதுவரை அஜித் படத்திற்கு இசையமைக்காத டி இமான் முதல் முறையாக இந்த படத்தில் இசையமைக்கிறார். பாடல்கள் பதிவும் சமீபத்தில் முடிந்துள்ளதாக டிவிட்டரில் தகவல் வெளியானது.
அஜித்- சிவா காம்போ செண்ட்டி மெண்ட்டாக படத்தின் டைட்டில் ஆங்கில எழுத்து v-ல் ஆரம்பித்து m-ல் முடியுமாறு தங்கள் 4 படங்களுக்கும் வைத்துள்ளனர். அதே போல அஜித்தும் சிவாவும் சாய்பாபா பக்தர்கள் என்பதால் படத்தைப் பற்றிய ஒவ்வொரு அறிவிப்புகளையும் வியாழக்கிழமை அன்றே வெளியிட்டு வருகின்றனர். படத்தின் டைடில் வெளியீடு, ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு போன்றவற்றை வியாழக்கிழமைகளிலே வெளியிட்டனர்.
கடந்த மாதத்தில் வெளியான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் அஜித தனது வழக்கமான சால்ட் அண்ட் பெப்பர் லுக் மற்றும் இளமையான அஜித் என இரு தோற்றத்தில் காணப்பட்டார். விஸ்வாசத்தில் அஜித் மும்பையைச் சேர்ந்த டானாகவும் மற்றும் திருநெல்வேலியை சேர்ந்த சாதாரண மனிதராகவும் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
காமெடி மற்றும் செண்ட்டிமெண்ட் ஆகிய அம்சங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு உருவாகிவரும் இந்தப்படத்தில் ரோபோ சங்கர், யோகி பாபு, தம்பி ராமையா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் அஜித் விஸ்வாசம் படத்திற்கான தான் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங் பணியை நிறைவு செய்தார். பொங்கல் வெளிய்யிடாக வரவிருக்கும். இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. பொங்கல் வெளியீடாக பேட்ட படமும் வர இருப்பதால் விஸ்வாசம் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று வெளியான போஸ்டரின் மூலம் விஸ்வாசம் பொங்கல் வெளியீடாக வருவது தற்போது உறுதியாகியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமாகி கொண்டாடி வருகின்றனர்.