என் தூக்கத்தைத் துரத்திவிட்டது- ‘உள்ளொழுக்கு’ திரைப்படத்தை சிலாகித்த வைரமுத்து!

vinoth

வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (09:55 IST)
கடந்த மாதம் வெளியாகி மலையாளத் திரையுலகில் அதிர்வுகளை ஏற்படுத்திய திரைப்படம் ‘உள்ளொழுக்கு’. பார்வதி திருவொத்து மற்றும் ஊர்வசி ஆகியோர் மருமகள் மற்றும் மாமியாராக நடித்திருந்தனர். அவர்களுக்கு இடையிலான உணர்வுப்பூர்வமான போராட்டமே இந்த திரைப்படம்.

திரையரங்க வெளியீட்டுக்குப் பின் ஓடிடியில் வெளியாகி இந்த படம் மொழி தாண்டியும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இந்நிலையில்தான் தமிழ் திரைப்பட உலகின் முன்னணி பாடல் ஆசிரியரான வைரமுத்து இந்த படத்தைப் பாராட்டி தன்னுடைய முகநூல் பக்கத்தில் சிலாகித்துள்ளார்.

அவரது பதிவில் “ஒரு மலையாளப் படம் பார்த்தேன் 'உள்ளொழுக்கு' . மிச்ச இரவு என் தூக்கத்தைத் துரத்திவிட்டது. வெற்றாரவாரங்களும் தொழில்நுட்பத் துயரங்களும் சூழக் கிடக்கும் சினிமாச் சிரமங்களுக்கு மத்தியில் ஒப்பனை செய்யாத உண்மை ஓவியம் வாழ்வின் காயத்திலிருந்து வழியும் சூடான ரத்தம் தாலி அறுக்குமுன்பே தடம் மாறிய மருமகளுக்கும் அவளுக்குத் தாயாகிப்போன மாமியாருக்குமிடையே நிலவும் உணர்ச்சியொழுக்கு "கலை உலகில் அறிந்த வரையில் அறிவார்ந்த பெண்கள் இருவர்" என்றார் கமல் " யார்? யார்?" என்றேன். " ஒருவர் ஊர்வசி; இன்னொருவர் கோவை சரளா".

அந்த ஊர்வசி அறிவைத் தன் கட்டுப்பாட்டில் கட்டிவைத்துவிட்டு உணர்ச்சிக்குத் தேவையான அளவு உப்பிட்டு நடித்த படம் பார்வதி என்ற பெண்ணை இப்போது தான் பார்க்கிறேன். வாழ்வு வலி இரண்டையும் எடுத்து உடுத்து நடித்திருக்கிறார்
படத்தின் முடிவில் கேரளம் தண்ணீரில்; நாம் கண்ணீரில். இயக்குனரை வாழ்த்துகிறேன். இப்படி ஒரு படம் நடிகர்களுக்கு மீண்டும் வாய்க்காது; நமக்கும்தான்” எனப் பாராட்டியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்