உலகம் முழுவதும் விருதுகளை குவிக்கும் தமிழ்ப்படம்

Webdunia
திங்கள், 3 டிசம்பர் 2018 (08:42 IST)
ஒளிப்பதிவாளர் செழியனின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியிருக்கும் சுயாதீன திரைப்படமான டூலெட் திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள சர்வதேசத் திரைப்பட விழாக்களில் விருதுகளைப் பெற்று வருகிறது.


தமிழ் சினிமாவின் முக்கியமான ஒளிப்பதிவாளரும் உலக சினிமாக்களைப் பற்றிய அறிமுகப் புத்தகங்களை எழுதியவருமான ஒளிப்பதிவாளர் செழியன் முதல் முறையாக தனது இயக்கத்தில் டூலெட் எனும் திரைப்படத்தை இயக்கித் தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படம் கடந்த ஆண்டு கொல்கத்தா திரைப்பட விழாவில் கலந்து கொண்டு தனது முதல் விருதினை வென்றது. அதையடுத்த ஒரு வருடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டுள்ளது. அவற்றில் 80 திரைப்பட விழாக்களில் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டும் 26 திரைப்பட விழாக்களில் விருதுகள் வென்றும் சாதனைப் படைத்துள்ளது.

தற்போது கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேசத் திரைப்பட விழாவில் மூன்று பிரிவுகளின் கீழ் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ள டூலெட் படம் கோவா விழாவில் சர்வதேச திரைப்படப் பிரிவில் போட்டியிடும் முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

உலகெங்கும் விருதுகளைக் குவித்து வரும் இத்திரைப்படத்தினை டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி முதல் வாரத்தில் திரைக்குக் கொண்டு வர முயற்சி செய்துகொண்டிருப்பதாக படத்தின் இயக்குனருமான தயாரிப்பாளருமான செழியன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்