மீண்டும் கிளம்பிய ‘எஞ்சாயி எஞ்சாமி’ பாடல் சர்ச்சை… தெருக்குரல் அறிவு ஆதங்கப் பதிவு!

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (14:38 IST)
‘தெருக்குரல்’ அறிவு எழுத்தில் பாடகர் தீ மற்றும் அறிவு பாடிய எஞ்சாயி எஞ்சாமி பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது.

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை மற்றும் தயாரிப்பில் இரு வாரங்களுக்கு  எஞ்சாய் எஞ்சாமி பாடல் யு டியூபில் வெளியானது.  இந்த பாடலுக்கான வரிகளை தெருக்குரல் அறிவு எழுத தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் இணைந்து பாடி இருந்தனர். குரலில்  ஏ ஆர் ரஹ்மானின் மாஜா ஸ்டுடியோவின் இணையப்பக்கத்தில் இந்த பாடல் வெளியானது. வெளியானதில் இருந்தே மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த பாடல் திரையுலகினர் பலரின் கவனத்தை ஈர்த்து பாராட்டுகளை பெற்றது.


இந்நிலையில் இப்போது இந்த பாடல் யுடியுபில் 30 கோடிக்கும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டுள்ளது. தமிழில் பெரிய நடிகர்களின் சினிமாப் பாடல்களுக்குக் கூட கிடைக்காத வரவேற்பு இந்த தனியிசைப் பாடலுக்குக் கிடைத்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாட் பாடலின் தொடக்க விழாவில் இந்த பாடல் பாடப்பட்டது. ஆனால் அதில் அறிவு கலந்துகொள்ளவில்லை. பாடகி தீ கலந்துகொண்ட நிலையில் அறிவின் வரிகளை மாரியம்மாள் பாடினார். அப்போதே இதுகுறித்து சர்ச்சைகள் கிளம்பின. பலரும் அறிவு ஏன் கலந்துகொள்ளவில்லை என கேள்வி எழுப்பி இருந்தனர்.

இந்நிலையில் இப்போது அறிவு தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் “எஞ்சாயி எஞ்சாமி பாடலுக்கு நான் மெட்டமைத்து எழுதி பாடினேன்.  அதற்காக   கிட்டத்தட்ட 6 மாதங்கள் தூக்கமில்லாமல், மன அழுத்தம் நிறைந்த இரவுகளையும் பகலையும் கழித்தேன். இது ஒரு சிறந்த குழுப்பணி என்பதில் சந்தேகமில்லை. அது அனைவரையும் ஒன்றாக அழைக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது வள்ளியம்மாளின் சரித்திரமோ அல்லது நிலமற்ற தேயிலைத் தோட்ட அடிமை என் முன்னோர்களின் சரித்திரமோ அல்ல என்று யாரும் கூறமுடியாது. என்னுடைய ஒவ்வொரு பாடலும் இந்த அடக்குமுறையின் அடையாளத்தை கொண்டிருக்கும். என் ஒவ்வொரு பாடலும் முன்னோர்களின் மூச்சு, அவர்களின் வலி, அவர்களின் வாழ்க்கை, அன்பு, அவர்களின் எதிர்ப்பு மற்றும் அவர்களின் இருப்பு பற்றிய அனைத்தையும் சுமந்து செல்லும் பாடல்கள். இவை அனைத்தும் அழகான பாடல்கள் மூலம் உங்களிடம் பேசுகிறது. ஏனென்றால், நாம் இரத்தமும் வியர்வையுமான ஒரு தலைமுறை விடுதலைக் கலைகளாக திட்டமிடப்பட்டிருக்கிறோம். பாடல்கள் மூலம் பாரம்பரியத்தை எடுத்துச் செல்கிறோம். நீங்கள் உறங்கும் போது உங்கள் பொக்கிஷத்தை யார் வேண்டுமானாலும் அபகரிக்கலாம். நீங்கள் விழித்திருக்கும் போது ஒருபோதும் நடக்காது. ஜெய்பீம்.” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக ரோலிங் ஸ்டோன் என்ற பத்திரிக்கை மிகவும் பிரபலமான பாடல்களை பாடியவர்களை அங்கிகரிக்கும் பொருட்டு அவர்களின் நேர்காணலையும் புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டது. ஆனால் அதன் அட்டை படத்தில் தீ படம் மட்டுமே இடம்பெற்றது. அறிவு புறக்கணிக்கப்பட்டதாக இப்போது சமூகவலைதளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன. திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் உள்ளிட்டவர்கள் அறிவுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்