ரூபாய் நோட்டுகள் தடையால் புதிய படங்கள் வாங்க வினியோகஸ்தர்கள் தயக்கம்!!

வியாழன், 17 நவம்பர் 2016 (12:20 IST)
பிரதமர் மோடி அவர்கள் கடந்த 8-ந் தேதி 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இதனால் கோடிக்கணக்கில் பணம் புழங்கும் திரைப்பட தொழிலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.


 


நடிகர்-நடிகைகள், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்பட தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் சிரமப்படுகிறார்கள். தினந்தோறும் படப்பிடிப்புகளுக்கு வரும் நடிகர்-நடிகைகள், துணை நடிகர்கள், தொழிலாளர்கள் போன்றோருக்கு தயாரிப்பாளர்கள் ரொக்கமாகவே சம்பளம் கொடுத்து வந்தனர். ஒரு நாள் படப்பிடிப்புக்கு மட்டும் ரூபாய் 5 லட்சம் வரை செலவாகும். 
 
இந்நிலையில் 1,000, 500 ரூபாய் நோட்டுகள் புழக்கம் நின்றதால் அன்றாட செலவுகளை சமாளிக்க தயாரிப்பாளர்கள் திணறுகிறார்கள். பல படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து புதிய படங்களின் தொடக்க விழா மற்றும் பூஜைகள், பாடல் வெளியீடு, டிரைலர் வெளியீடு உள்ளிட்ட பல பட விழாக்கள் ரத்து செய்யப்பட்டு விட்டன. 50-க்கும் மேற்பட்ட படங்கள் தணிக்கை முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளன. அந்த படங்களை வாங்க வினியோகஸ்தர்கள் முன் வராததால் முடங்கி கிடக்கும் நிலை உருவாகி உள்ளது.
 
சினிமா கவுண்ட்டரில் டிக்கெட் எடுக்க வரும் ஒரு சிலரும் ரூ.80, ரூ.120 கட்டணத்துக்கு 2,000 ரூபாயை நீட்டுவதால் அவற்றுக்கு சில்லரை கொடுக்க முடியவில்லை. ஆன்லைனில் மட்டுமே டிக்கெட்டுகள் எடுக்க முடிகிறது. இந்த நிலையில் கூட்டம் இல்லாமல் பல தியேட்டர்களில் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்