இளையராஜாவை கௌரவப்படுத்தும் விதமாக தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா ஒன்று நடக்க இருக்கிறது. இளையராஜாவுக்குப் பாராட்டு விழா என்று சொல்லப்பட்ட்டாலும் அதன் மூலம் வரும் 10 கோடி ரூபாய் வருமானத்தை வைத்தே தயாரிப்பாளர் சங்க கஜானாவை விஷால் நிரப்ப இருப்பதாக விஷாலின் போட்டியாளர்கள் கருதுகின்றனர்.
இதற்காக பிரபல தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ் இந்த இசை விழாவுக்கு எதிராக எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அதையடுத்து தயாரிப்பாளர் சங்க முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன் இளையராஜாவுக்கு எதிரான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘உலகெங்கும் உள்ள தொழில்கள் அனைத்திலும் காப்புரிமை என்பது முதலாளிகளுக்குதான். ஆனால் இளையராஜா, பாடல்களுக்கான ராயல்டி உரிமையைத் தயாரிப்பாளர்களுக்குக் கொடுக்காமல் தனக்கே சொந்தம் எனக் கூறுவது வேதனையான ஒன்று. இது சம்மந்தமாக நீதிமன்றமே 30 ஆண்டுகளுக்கு முன்னர் தீர்ப்பளித்துள்ளது. இளையராஜா தயாரிப்பாளர்களுக்குத் தர வேண்டிய ராயல்டி தொகையே 300 கோடிக்கு மேல் உள்ளது. அதைவிட்டுவிட்டு இளையராஜாவை வைத்து இசை நிகழ்ச்சி நடத்தி, அதன் மூலம் வரும் தொகை முதலாளிகளான நமக்குத் தேவையா?... இளையராஜா நம்மிடம் வேலைப் பார்த்தவர். நமக்கான உரிமையை அவர் இல்லை என சொல்வதா?’ எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்த அறிக்கையால் சில தயாரிப்பாளர்கள் விஷாலுக்கு எதிராகவும் இளையராஜாவுக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கும் சூழல் உருவாகி உள்ளது. ஏற்கெனவே பிரபல தயாரிப்பாளர் பி டி செல்வக்குமாரும் இதே போன்ற குற்றச்சாட்டை இளையராஜா மீது வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இளையராஜா நிகழ்ச்சிக்கு தயாரிப்பாளர்கள் மத்தியில் ஆதரவு இல்லாத சூழல் உருவாகி உள்ளது.