25 வருடங்களுக்கு முன்பே 'மீடு' பேசிய 'மகளிர் மட்டும்'
திங்கள், 25 பிப்ரவரி 2019 (09:43 IST)
கடந்த 25 வருடங்களில் 'மகளிர் மட்டும் ' படத்துக்குப் பிறகு பல படங்கள் வந்திருக்கலாம். ஆனால் வேலை செய்யும் இடத்தில் பாலியல் ரீதியான தொந்தரவுகளை 3 பெண்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை நகைச்சுவை உணர்வுடன் சொன்ன படம் மகளிர் மட்டும் படம்தான்.
இன்று #metoo விவகாரம் பெரிய டாபிக்காக எல்லாராலும் பேசப்படுகிறது. ஆனால் 25வருடங்களுக்கு முன்பே மகளிர் மட்டும் படம், 1994ம் ஆண்டு இதே நாளில் உலகுக்கு கூறி இருக்கிறது.
ஹாலிவுட் படமான 9 to 5 படத்தை பார்த்து வியந்து போன கமல் , அதே போன்ற ஒரு படம் தமிழில் வர வேண்டும் என ஆசைப்பட்டார். தனது ஆசையை எழுத்தாளர் கிரேசி மோகனிடம் கூறினார்.
அவர் கதையை உருவாக்கி இயக்கினார்.அவரது மனைவி மகளிர் மட்டும் படத்துக்கான திரைக்கதையை எழுதினார். இந்த படத்துக்கு மகளிர் மட்டும் என்ற தலைப்பை கிரேஸிமோகன் தான் வைத்தார்.
பணி இடத்தில் வேலை செய்யும் 3 பெண்கள், உயர் அதிகாரியால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகின்றனர். அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்யும் அந்த உயர் அதிகாரிக்கு பாதிக்கப்பட்ட 3 பெண்கள் தக்க பாடம் புகட்டுவதே மகளிர் மட்டும் படத்தின் கதை.
நாசர் உயர் அதிகாரியாகவும் அவருக்கு கீழ் ரேவதி, ஊர்வசி அலுவலக பணியாளர்களாகவும் நடித்திருந்தனர். அலுவலகத்தில் சுத்தம் செய்யும் பாப்பம்மாள் என்ற கேரக்டரில் ரோகிணி நடித்தார். நாசரின் பாலியல் தொந்தரவை தாங்கமுடியாத இந்த மூன்று பேரும் ஒருகட்டத்தில் நாசரை கடத்தி வைக்கின்றனர். அங்கு அவருக்கு தக்க பாடத்தை மூன்று பேரும் புகட்டுகின்றனர். ஒரு கட்டத்தில் நாசரின் தொல்லைகள், நிறுவனத்தின் எம்டியாக சிறப்பு தோற்றத்தில் வரும் கமலுக்கு தெரிகிறது. அதன்பின் நாசர் மாட்டி கொள்கிறார். கமல் 3 பேரையும் பாராட்டுகிறார். இதுதான் படத்தின் முழு கதை.
இப்படத்தில் இடம்பெற்ற 'கரவ மாடு மூனு , காள மாடு ' ஒன்று பாடல் மிக மிகப் பிரபலமானது.
கலைபுலி எஸ் தாணு இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த வேடத்தில் நடிக்க பாரதிராஜா மற்றும் வைரமுத்துவிடம் முன்னதாக படக்குழுவினர் அணுகினார்கள்.
பிசி ஸ்ரீராம் தான் மகளிர் மட்டும் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என கமல் விரும்பினார். ஆனால் அவர் மணிரத்னம் இயக்கிய திருடா திருடா படத்தில் பிசியாக இருந்ததால் அவருடைய சிபாரிசின் பேரில் , ஶ்ரீராமின் உதவியாளர் திரு(திருநாவுக்கரசர்) என்பவர் ஒளிப்பதிவு செய்தார்.
இளையராஜா இப்படத்திற்கு மிக அற்புதமாக இசையமைத்திருப்பார்.
மகளிர் மட்டும் படம் ஒரு அலுவலகத்தில் நடக்கும் கதை என்பதால், வாகினி ஸ்டூடியோ கட்டடம் சூட்டிங்கிற்கு பயன்படுத்தப்பட்டது.