நடிகை பார்வதியை ஒதுக்கிய மலையாள சினிமா...! காரணம் இது தானா?
திங்கள், 22 அக்டோபர் 2018 (11:06 IST)
மலையாள நடிகை பார்வதி தனக்கு ஒரு வருடமாக பட வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருவதாகவும், தினமும் பாலியல் மற்றும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும் மலையாள திரையுலகின் மீது பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
தமிழில் பூ மற்றும் மரியான் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் பார்வதி. இவர் மலையாளத்திலும் பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில்,பிரபல மலையாள நடிகை பாவனாவை கடத்தி பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் அந்த நடிகைக்கு ஆதரவாகவும், நடிகர் திலீப்புக்கு எதிராகவும் பார்வதி பேசி வருகிறார்.
மேலும், மலையாள நடிகர் சங்கத்தில் திலீப்பை மீண்டும் சேர்த்த நடிகர் மோகன்லாலை கண்டித்தார். இதனால், மலையாள சினிமாவில் அவருக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
இந்நிலையில், நியாயத்தின் பக்கம் நின்று போராடுவாதல் தனக்கு நேர்ந்து வரும் துயரம் குறித்து கூறியுள்ள பார்வதி, “நடிகைகள் பாதுகாப்பிற்காக மலையாள திரைப்பட பெண்கள் ஒன்றுகூடி ஒரு கூட்டமைப்பை உருவாக்கினோம்.
அதன்பிறகு எனக்கும் அந்த அமைப்பில் இருக்கும் மற்ற நடிகைகளுக்கும் புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு தராமல் ஒதுக்குகிறார்கள்.
பாலிவுட்டில் மீ டூவில் பாலியல் புகார் கூறிவரும் நடிகைகளுக்கு படவாய்ப்புகள் அளிக்கின்றனர். தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் புதிய படங்களில் அவர்களை ஒப்பந்தம் செய்கிறார்கள்.ஆனால் இங்கு அப்படி இல்லை, ஹீரோக்களையே கடவுளாக பார்க்கின்றனர். நடிகர்களின் ரசிகர் மன்றங்கள் குண்டர்கள் மன்றமாக மாறி இருக்கிறது.
அவர்கள் சமூக வலைதளங்களில் எனக்கும் என்னுடன் சேர்ந்து போராடும் மற்ற நடிகைகளுக்கும் கொலை மிரட்டல், பாலியல் மிரட்டல்கள் விடுக்கின்றனர். நாங்கள் தினமும் பயத்திலேயே இருக்கிறோம். நிறைய வெற்றி படங்களை கொடுத்த எனக்கு ஒரு வருடமாக படங்கள் இல்லை" என வேதனையுடன் நடிகை பார்வதி தெரிவித்திருக்கிறார்.