காசி தியேட்டரில் மெர்சல் ரிலீஸ் இல்லை ; இன்னும் எத்தனை தியேட்டர்?

திங்கள், 16 அக்டோபர் 2017 (10:53 IST)
சென்னையில் உள்ள  காசி தியேட்டரில் மெர்சல் படம் ரிலீஸ் இல்லை என்ற விவகாரம் விஜய் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.


 

 
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளியன்று வெளியாகவிருந்து படம் மெர்சல். தலைப்பு, கேளிக்கை வரி, விலங்கு நல வாரியம் என தொடர்ச்சியாக பிரச்சனையை இப்படம் சந்தித்துள்ளது.
 
இந்நிலையில்தான், நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் அட்லீ ஆகிய இருவரும் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து பேசினர். இதையடுத்து, மெர்சல் படத்திற்கு தடையில்லா சான்று வழங்குவது குறித்து விலங்கு நல வாரியம் இன்று காலை அவசரமாக ஆலோசனை செய்யவுள்ளது.  இதில் படக்குழுவிற்கு சாதகமான பதில் கிடைக்குமா இல்லை சிக்கல் ஏற்படுமா என்பது இன்று தெரிய வரும்.
 
இந்நிலையில், சென்னை, அசோக்நகரில் உள்ள காசி தியேட்டரில்  ‘மெர்சல்’ ரிலீஸ் இல்லை என்பது தெரியவந்துள்ளது.  பொதுவாக, முக்கிய ஹீரோக்கள் நடிக்கும் புதிய படங்கள் கண்டிப்பாக காசி தியேட்டரில் வெளியாகும். ஆனால், மெர்சல் படம் அந்த விதியை மாற்றியுள்ளது.
 
அதாவது, அரசு நிர்ணயிக்கும் கட்டணங்களை மட்டுமே தியேட்டர்களில் வசூலிக்கப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷாலும் அதை உறுதி செய்தார். 


 

 
இந்நிலையில்தான், காசி தியேட்டர் நிர்வாகம் தனது டிவிட்டர் பக்கத்தில் “சமீபத்தில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் எங்களுக்கு திருப்தி இல்லாததால், மெர்சல் படத்தை தீபாவளிக்கு நாங்கள் திரையிடவில்லை” என தெரிவித்துள்ளது.
 
பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள மெர்சல் படம், கண்டிப்பாக பெரிய விலைக்கு விற்கப்படும். தியேட்டர்களில் அதிக விலைக்கு விற்றாமல் அதை ஈடுகட்ட முடியும் என தியேட்டர் அதிபர்கள் நினைக்கிறார்கள். ஆனால், அதற்கு அரசு கடிவாளம் விதித்துள்ளது. இந்நிலையில்தான் காசி தியேட்டர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 
இதுபோல், இன்னும் எத்தனை தியேட்டர்கள் இப்படி அறிவிக்கும் எனத் தெரியவில்லை. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்