சில நிமிடங்களில் வெள்ள நீர் வீட்டுக்குள் வந்திடுச்சு : வெள்ளத்தில் சிக்கிய அனன்யா உருக்கம்

திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (11:15 IST)
கேரள வெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கேரளத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழையினால் 6 மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இதன் விளைவாக 320-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 லட்சத்துக்கும் மேலானோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.
 
இந்த பேரிடரில் திரையுலகினரும் தப்பவில்லை. குடும்பத்துடன் காரில் சென்றுக் கொண்டிருந்த  நடிகர் ஜெயராம்  நிலச்சரிவில் சிக்கிக் கொண்டார். இதைத்தொடர்ந்து,  திருவனந்தபுரத்திலுள்ள  நடிகர் பிருத்விராஜின் வீடும் வெள்ளத்தில் மூழ்கியது.  மேலும், நடிகை அனன்யாவின் வீடும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டது.  
 
வெள்ளத்தில் இருந்து மீண்டு வந்த அனன்யா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உருக்கமான  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அவர் அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது:
 
''கடந்த 2 நாட்களாக மழையில் சிக்கி நாங்கள் பட்ட துன்பத்தைச் சொல்ல இயலாது. எங்கள் வீடு முழுவதும் தண்ணீருக்குள் மூழ்கிவிட்டது.
 
அதன்பின் மீட்டுப் படையினர் மூலம் மீட்கப்பட்டு, வெள்ளிக்கிழமை காலையில்தான் பாதுகாப்பாக பெரம்பாவூரில் உள்ள நடிகை ஆஷா சரத்தின் வீட்டுக்கு வந்தோம். கடந்த 2 நாட்களாக மிகவும் மோசமான சூழலில் சிக்கி இருந்தோம். சில நிமிடங்களில் வெள்ள நீர் கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. என்னுடைய உறவினர்கள் அனைவரின் வீடும் வெள்ள நீரில் சிக்கி இருக்கிறது.
 
அடுத்து என்ன நடக்கப் போகிறது என எங்களுக்குத் தெரியாது. அனைத்தும் கடவுள் கையில்தான் இருக்கிறது. இன்னும் மழை பெய்து கொண்டு இருக்கிறது. மிகவும் மோசமான அனுபவத்தை மக்கள் சந்தித்து இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏராளமானோர் உதவிக்கரம் நீட்டி இருக்கிறார்கள். பெரம்பாவூரிலும் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. ஏராளமானோர் வீடுகளை இழந்திருக்கிறார்கள். எங்களை வெள்ளத்தில் இருந்து மீட்ட அனைவருக்கும் நன்றி.'' இவ்வாறு நடிகை அனன்யா தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்