'ஹன்சிகா' நடிப்பில் மார்ச்-8-ஆம் தேதி மிரட்டலாக வெளியாகும் ' கார்டியன்'

J.Durai

புதன், 6 மார்ச் 2024 (08:58 IST)
தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் நடித்துள்ள 'கார்டியன்' திரைப்படத்தின் மிரட்டலான டீஸர் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 
 
இந்த டீஸரில் ஹன்சிகா இரட்டை வேடத்தில் வருவது மாதிரியான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது
 
இத்திரைப்படத்தில் ஹன்சிகா மோத்வானியுடன் சுரேஷ் மேனன்,ஸ்ரீமன், அபிஷேக்  வினோத்,ஸ்ரீராம் பார்த்தசாரதி, 'மொட்டை'ராஜேந்திரன்,பிரதீப் ராயன்,'டைகர் கார்டன்' தங்கதுரை மற்றும் சில முன்னணி நடிகர்,நடிகைகளும் நடித்துள்ளனர்.
 
இப்படத்தை குரு சரவணன் மற்றும் சபரி ஆகியோர் இயக்கி உள்ளனர்.
 
இப்படத்திற்கு கதை, திரைக்கதை,வசனத்தை குரு சரவணன் எழுதியுள்ளார். ஃபிலிம் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் வாலு, ஸ்கெட்ச், சங்கத்தமிழன் போன்ற படங்களை இயக்கிய விஜய் சந்தர் தயாரித்துள்ளார்.
 
இப்படத்திற்கு சாம் C.S மிரட்டலான இசையை அமைத்துள்ளார். இப்படத்திற்கான ஒளிப்பதிவாளராக K.A.சக்திவேல் மற்றும் படத்தொகுப்பாளராக M.தியாகராஜன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்
 
மாபெரும் வெற்றித் திரைப்படமான 'விஸ்வரூபம்' திரைப்படத்திற்காக தேசிய விருது வென்றவரான 'லால்குடி' N.இளையராஜா,இப்படத்தின் கலை இயக்குனராக தன் பணியை சிறப்பாக செய்து படத்திற்கு வலுசேர்த்து இருக்கிறார். சண்டைப் பயிற்சியாளராக 'டான்' அசோக் பணியாற்றிருக்கிறார்
 
விவேகா, சாம் C.S , உமாதேவி ஆகியோர்தம் பாடல்வரிகள் மூலம் படத்தின் இசையை மெருகேற்றியுள்ளனர்
 
இந் நிலையில்  படத்தின் இரண்டாவது டீசர் வெளியீட்டு விழாவில்  பத்திரிகையாளர் சந்திப்பு  நடைபெற்றது.
 
அப்போது பேசிய
கார்டியன் திரைப்படத்தின்  தயாரிப்பாளர்  விஜயசந்தர் 
 
தனக்கு உறுதுணையாக இருந்த தனது நண்பர்களுக்கு நன்றி கூறினார். "நான் தொடங்கிய 'வாலு' திரைப்படம் மூன்று வருடங்களுக்கு பிறகே வெளியானது. 
அந்த படம் வெளியாவதற்கு என் நலம் விரும்பிகளான ஊடகத்துறையை சேர்ந்தவர்கள் கொடுத்த ஊக்கமே காரணம். 'கார்டியன்' படம் தொடங்குவதற்கு முன் நான் ஒரு படத்தை இயக்கலாம் என்று இருந்தேன்,  கொரோனா தொற்று காலம் என்பதால்  பல திரைப்படங்களின் வெளியிட்டு தேதியும் மாறி விட்டது. அடுத்ததாக படத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் தன் நண்பர்கள் மற்றும் சகோதரர்கள் தான் இந்த படம் தயாரிப்பு குறித்த யோசனையை எனக்கு அளித்தனர். அப்பொழுதுதான் இயக்குனர்கள் இருவரும் இந்த கதையை என்னிடம் கூறினர். கதாநாயகி முக்கியத்துவம் உள்ள கதை என்பதால் தனது எண்ணத்திற்கு முதலாவதாக வந்தவர் ஹன்சிகா மோத்வானி ஆவார். அதன் பிறகு இந்த கதையில் அவர் பொறுப்பெடுத்துக் கொண்டு இந்த படத்தை சிறப்பாக முடித்து கொடுத்தார். தொழில்நுட்பக் குழுவினரும் இந்த படத்தில் பணிபுரிய ஆர்வத்தோடு அவர்களாகவே வந்து எங்களுடன் இணைந்து கொண்டனர். 
 
அதுவே இந்த படம் சிறப்பான ஒரு தயாரிப்பாக உருவாவதற்கு மூலக் காரணமாக அமைந்தது. கிராபிக்ஸ் காட்சிகளுக்காக மிகவும் உழைத்தோம். சிறப்பாக இந்த படம் வர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். மார்ச் 8-ஆம் தேதி படம் வெளியாக உள்ளது, ஊடக நண்பர்கள் தங்களது ஆதரவை எங்களுக்கு தர வேண்டும்" என்று  கூறினார்.
 லால்குடி.N.இளையராஜா 
 
அவருக்கு பிறகு பேசிய," கலை இயக்குனர் திரு லால்குடி என் இளையராஜா பேசும் பொழுது,"நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். ஒரு கலைஞனாக குருநாதருக்கும் அவரது மாணவர்களுக்கும் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. திரு கே.எஸ் ரவிக்குமார் அவர்களிடம் பணிபுரியும் பொழுது நிறைய கற்றுக் கொண்டேன். அதுபோல சபரி மற்றும் குரு சரவணன் இருவருடனும் பணிபுரிந்தேன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. விஜய்சந்தர் தொழில் ரீதியாக மட்டுமல்லாமல் பல விஷயங்களை என்னுடன் பகிர்ந்து கொள்வார்,அப்படித்தான் நான் இந்த படத்தில் விருப்பப்பட்டு பணியாற்ற வந்தேன். படத்தை சிறப்பாக உருவாக்கியுள்ளோம். ஊடகத்துறையினர் தங்களது ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்", என்று பேசினார்.
 
 ஒளிப்பதிவாளர் தியாகராஜன்
 ஊடகத்துறையினருக்கும் இங்கு அமர்ந்திருக்கும் ஜாம்பவான்களுக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.விஜயசந்தர் அவர்களிடம் இருந்து அழைப்பு வந்தது. அவரை சந்தித்த பிறகு இந்த படத்தை பற்றி கூறி, எனக்கு வாழ்த்து தெரிவித்து நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு படத்தில் இணைகிறோம் என்று கூறினார். இயக்குனர்களுக்கும், கலை இயக்குனர் லால்குடி.N.இளையராஜா அவர்களுக்கும் இசையமைப்பாளர் சாம் C.S அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல படத்தின் கதாநாயகி இங்கு அமைதியாக இருந்தாலும் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படம் சிறப்பாக வந்துள்ளது அனைவருக்கும் நன்றி", என்றார்.
 இசையமைப்பாளர் சாம்.C.S 
 
"சமீப காலத்தில் ஹன்சிகா அவர்களுடன் தொடர்ந்து மூன்று படங்களில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.மூன்றும் ஹாரர் திரைப்படங்களாக அமைந்தது.முன்பெல்லாம் கதாநாயகி வேடம் என்பது துணை கதாபாத்திரமாக இருந்தது. தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நிறைய முன்னணி நடிகைகள் நடித்து வருகிறார்கள். அதில் ஹன்ஷிகாவும் ஒருவர்.மூன்று திரைப்படங்களிலும் வெவ்வேறு விதமான நடிப்பை கொடுத்துள்ளார். நிறைய ஹாரர் படங்கள் பண்ணும் பொழுது நாம் நிழல் உலகத்திற்கு சென்று விடுவது போல தோன்றும் அது சினிமா என்ற ஆர்வமும் காரணமாகும். அதேபோலத்தான் இந்த படத்திலும் சிரத்தையுடன் பணியாற்றி உள்ளேன். இயக்குனர்கள் இருவருடனும் இதுதான் முதல் படம். அவர்களின் கருத்துக்களை பெறுவது மிகவும் கடினமாக இருந்தது. இந்தத் திரைப்படம் வெறும் ஹாரர் திரைப்படமாக மட்டுமல்லாமல் உணர்வு பூர்வமான திரைக்கதையுடனும்  உருவாகியுள்ளது. இந்தப் படம் வெற்றி அடைய வேண்டும் என்று அனைவரும் நேர்மையான உழைப்பை கொடுத்துள்ளனர்.தயாரிப்பாளர் விஜய்சந்தர் உள்பட இதுவும் ஒரு ஹாரர் படம் என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக மிகவும் மெனக்கட்டுள்ளார். ஒரு படைப்பு மிகவும் நன்றாக வரவேண்டும் என்ற தேடலுடன் திரைப்படத்தை விஜய்சந்தர் உருவாக்கியுள்ளார்.  கே.எஸ்.ரவிக்குமார் அவர்களுடன் பணி புரிய வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. அவர் எங்களை வாழ்த்த வந்ததற்கு மிக்க நன்றி. அவர் இயக்கியது போன்ற குடும்ப பாங்கான, நகைச்சுவையான திரைப்படங்கள் மிகவும் குறைவாக வெளி வருகின்றன. அதற்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. ஒரு படத்திற்கான இசையமைப்பு பணியில் பலதுறையினர் பணியாற்றுகின்றனர்.அதை தொகுத்து பணியாற்றும் பொழுது படத்தின் இசை நடிகர்களின் இயல்பான நடிப்பை அழுத்திவிடக் கூடாது என்பதில் கவனமாக பணியாற்றுகிறேன். ஒரே மாதிரியான இசையை கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்று ரசிகர்களுக்கு தோன்றும் விதமாக இல்லாமல், விதவிதமான திரைக்கதைகளையும் விதவிதமான இசையையும் முயற்சி செய்து கொண்டும் பணியாற்றிக் கொண்டும் இருக்கிறேன். உதாரணத்திற்கு ஹன்ஷிகா உடனே மூன்று படங்களில் பணிபுரிந்திருக்கிறேன். மூன்றிலும் ஒரே மாதிரியான இசையை நாம் கொடுக்க முடியாது விதவிதமான இசையை முயற்சி செய்ய வேண்டி உள்ளது,அவ்வாறு செய்யும்போது சில வெற்றி அடையும் சில தோல்வியடையும் தோல்வியிலிருந்து அனுபவத்தை கற்றுக் கொண்டுள்ளேன். ஊடகத்துறையினரின் ஆதரவு மிகவும் தேவை. அனைவருக்கும் நன்றி", 
 
 ஹன்ஷிகா மோத்வானி
 
,"கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள 'கார்டியன்' திரைப்படம் வரும் மார்ச் 8-ஆம் தேதி மகளிர் தினத்தன்று வெளியாகிறது. எப்பொழுதும் போல ஊடகத் துறையினரின் ஆதரவு எங்களுக்கு வேண்டும். இந்த திரைப்படக் குழுவினர் கூறியது போல உங்கள் அனைவருடைய ஆசிர்வாதமும் ஆதரவும் தேவை. இந்தத் திரைப்படத்தில் பணியாற்றியதற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்கும் நன்றி", என்றார்
 
 படத்தின் கதாநாயகன் பிரதீப் 
 
,"ஊடகத்துறையினர் அனைவருக்கும் மாலை வணக்கம்! எங்களை வாழ்த்த வந்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களுக்கும் நன்றி. ஏதாவது ஒரு நல்ல கதாபாத்திரம் வந்தால் கண்டிப்பாக உன்னை அழைக்கிறேன் என்று கூறினார். அதே போல இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு வழங்கினார். எனது கதாபாத்திரத்தில் எனக்கு எந்தவித ஏமாற்றமும் ஏற்படவில்லை. இயக்குனர்கள் சபரி-குரு சரவணன் மற்றும் ஹன்ஷிகா மோத்வானி அவர்களுக்கும் மிக்க நன்றி. படத்தில் பணியாற்றிய நடிகர்,நடிகைகளுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் மிக்க நன்றி. வரும் மார்ச் 8-ஆம் தேதி படம் வெளியாகிறது, ஊடகத்துறையினரின் ஆதரவு இருக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி!", என்றார்.
 
 இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்
 நான் எப்பொழுதும் இயக்குனர்களை பற்றி தான் முதலாவதாக பேசுவேன்.ஆனால் இங்கே தயாரிப்பாளர் பற்றி பேசுகிறேன். ஆனால் தயாரிப்பாளரே ஒரு இயக்குனர் தான் அவரைப்பற்றி முதலில் பேசுகிறேன். இந்த இரட்டை இயக்குனர்களின் முதலாவது படமான கூகுள் குட்டப்பா வெளியாகும் முன்பே அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க ஒத்துக் கொண்ட தயாரிப்பாளர் விஜய்சந்தருக்கு மிக்க நன்றிகள். சாம்.C.S உடன் பழக்கம் உள்ளது.கலைஞர்-100 நிகழ்விற்கு  நாங்கள் உருவாக்கிய நாடகத்திற்கு எந்த மறுப்பு தெரிவிக்காமல் இசையமைத்து கொடுத்தார்.அவருக்கு நல்ல குரல்வளம் அவருக்கு உள்ளது. அவருக்கு இசைவெறி உள்ளது. கலை இயக்குனர் லால்குடி.N.இளையராஜா, கன்னட நடிகர் கிச்சா சுதீப் வியக்கும் அளவிற்கு வீடு ஒன்றின் கலை வடிவத்தை அமைத்திருந்தார்.
 
என்னுடனும் என்னுடைய உதவியாளர்களுடன் பணி புரிந்தமைக்கு மிக்க நன்றி. ஹன்ஷிகாவும் தன்னுடைய சிறப்பாக நடித்திருந்தார்.அதேபோல பிற கலைஞர்களும் சிறப்பாக நடித்திருந்தனர்.கார்டியன் என்ற தலைப்பு இந்த கதைக்கு பொருத்தமாக உள்ளது. எனது படங்களில் உள்ளது போல அனைத்து அம்சங்களும் இந்த படத்திலும் உள்ளன. குரு சரவணன் ஒரு கலகலப்பான ஆள், சபரி சற்று சாதுவான ஆள் இசையமைப்பாளர் கூறியது போல இருவரையும் கணிக்க முடியாது.எங்கிருந்தாலும் நல்லபடியாக வருவதற்கு வாழ்த்துகிறேன்", என முடித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்