பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘காலா’. இதன் படப்பிடிப்பு வருகிற 28ஆம் தேதி மும்பையில் தொடங்க இருக்கிறது. இன்று காலை 10 மணிக்குத்தான் படத்தின் தலைப்பை வெளியிட்டார் தயாரிப்பாளரான தனுஷ். எனவே, அதற்கு முன்பு இந்தப் படத்தைப் பற்றி செய்திகள் வெளியானபோது, #Thalaivar161 மற்றும் #Rajini161 என்ற இரண்டு ஹேஷ் டேக்குகளைப் பயன்படுத்தினர். அதாவது, இந்தப் படம் ரஜினியின் 161வது படம் என்று குறிப்பிட்டு வந்தனர்.
இன்று காலை 10 மணிக்கு தலைப்பு வெளியாகும் என்று ட்விட்டரில் நேற்று அறிவித்த தனுஷ் கூட, #Thalaivar161 என்ற ஹேஷ் டேக்கைத்தான் பயன்படுத்தினார். ஆனால், இன்று காலை போஸ்டரை வெளியிட்ட தனுஷ், #Thalaivar164 என்ற ஹேஷ் டேக்கைப் பயன்படுத்தி இருந்தார். இதனால், இந்தப் படம் ரஜினியின் 161வது படமா அல்லது 164வது படமா என்பதில் ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது.
உண்மையில், ரஜினிக்கு இது 164வது படம்தான். சில நாட்களுக்கு முன்பு ரசிகர்களை ரஜினி சந்தித்தபோது, உடனிருந்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமனும் 164வது படம் என்றுதான் குறிப்பிட்டார். அப்படி இருந்தும், நேற்று தனுஷ் 161 என்று குறிப்பிட்டது சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது. இது கூட தெரியாமலா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார் தனுஷ் என்று கேள்வி எழுப்புகிறார்கள் சிலர்.
இந்நிலையில், #Thalaivar161 #Thalaivar164 என்ற இரண்டு ஹேஷ் டேக்குகளுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், #Rajini161 மற்றும் #Rajini164 என்ற ஹேஷ் டேக்குகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும், 164வை விட, #Thalaivar164 என்ற ஹேஷ் டேக்கே ட்ரெண்டிங்கில் இருக்கிறது.