சூர்யா நடித்துள்ள ‘24’ படத்தில் என்ன சிறப்பம்சம்?

வியாழன், 5 மே 2016 (16:58 IST)
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 24 படத்தின் சில சிறப்பம்சங்கள் தெரியவந்துள்ளது.


 

 
இப்படத்தில் சூர்யா, சமந்தா, நித்யா மேனன் ஆகியோர் நடிக்கிறார்கள்.  தமிழில் ‘யாவரும் நலம்’ மற்றும் தெலுங்கில்  ‘மனம்’ என ஹிட்டடித்த படங்களை இயக்கிய இயக்குனர் விக்ரம்.கே.குமார் இப்படத்தை இயக்குகிறார்.
 
‘மனம்’ படத்தை பார்த்து விட்டு, சூர்யா அந்த கதையை தமிழில் செய்ய முடிவெடுத்து, விக்ரமை அழைத்து பேசியிருக்கிறார். ஆனால், நான் வேறொரு கதை சொல்கிறேன் கேளுங்கள் என்று 24 படத்தின் கதையை கூறியிருக்கிறார் விக்ரம்.
 
சயின்ஸ் பிக்சன் த்ரில்லரான அந்த கதையை கேட்டு பிரமித்த சூர்யா உடனே ஓகே சொல்லியதோடு, தனது சொந்த பட நிறுவனமான 2டி தயாரிப்பு நிறுவனம் மூலமே இந்த படத்தை தயாரிக்கிறேன் என்று கூறி விட்டாராம்.

மேலும், அவரை ஏ.ஆர்.ரகுமானிடம் அனுப்பி கதை சொல்ல சொல்லியிருக்கிறார் சூர்யா. நேராக ரகுமான் வீட்டிற்கு சென்ற விக்ரம், அவருக்கும் கதை சொல்லியிருக்கிறார். இசைப் புயலுக்கும் அந்த கதை மிகவும் பிடித்து விட உடனே  ‘இந்த படத்திற்கு நான் இசையமைக்கிறேன்’ என்று கூறிவிட்டாராம்.
 
இப்படித்தான் ஆரம்பித்திருக்கிறது 24 படம். இந்த படத்தில் சூர்யா காலத்தை கடந்து செல்லும் கால எந்திரம் (டைம் மிஷின்) ஒன்றை தயாரிக்கும் ‘ஆத்ரேயா’ என்ற விஞ்ஞானியாக வருகிறார். கதையின் பிற்பகுதியில் அதே கதாபாத்திரத்தில் மிரட்டலான வில்லனாக வருகிறாரம் சூர்யா.
 
அந்த எந்திரத்தை இயக்கும் ஒரு கடிகாரம், ப்ளே பாய் மற்றும் கடிகார மெக்கானிக்கான சூர்யாவிடம் எப்படியோ வந்து விட, அதை திரும்ப பெற விஞ்ஞானி சூர்யா எப்படி முயற்சி செய்கிறார் என்பதுதான் கதை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
 
இதில் சூர்யா பல வகையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனால் ஐந்து விதவிதமான கெட்டப்களில் வருகிறார் சூர்யா. 
 
டை மிஷன் சம்பந்தப்பட்ட கதைகளோடு ஹாலிவுட்டில் நிறைய படங்கள் வெளி வந்திருக்கிறது. ஆனால், தமிழில் அப்படி படங்கள் வந்ததில்லை. சில ஆண்டுகளூகு முன்பு ‘நேற்று இன்று நாளை’ என்ற படம் டைம் மிஷின் சம்பந்தப்பட்டதுதான்.
 
தற்போது சூர்யாவின்  ‘24’ வெளியாகிறது. இந்த படத்தின் கதை பற்றி கருத்து தெரிவித்த இயக்குனர் விக்ரம் “இதுபோன்ற கதையை இதற்கு முன் ஏராளமான எழுத்தாளர்களும், இயக்குனர்களும் முயற்சி செய்துள்ளார்கள். ஆனால் நான் வேறு விதமாக முயற்சி செய்திருக்கிறேன். எல்லோருக்கும் புரியும் வகையில் கதை அமைத்திருக்கிறேன். எனவே 6 வயது சிறுவர் முதல் 60 வயது பெரியவர்கள் வரை எல்லோருக்கும் இந்தப் படம் மிகவும் பிடிக்கும்’ என கூறியிருக்கிறார். 
 
’ஒருவன் எவ்வளவு அறிவாற்றல் உடையவனாக இருந்தாலும், அவனால் காலத்தை கட்டுப்படுத்த முடியாது’ என்ற கருத்துதான் படத்தின் அடி நாதம்.

பலத்த எதிர்பார்ப்பில் உள்ள  ‘24’ நாளை உலகமெங்கும் வெளியாகிறது.  ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் நிறைவேற்றுமா என்பது நாளை தெரிந்துவிடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்