இந்த அறக்கட்டளை மூலமாக முதற்கட்டமாக ஏழை விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஏழை விவசாயிகள் 10 பேருக்கு டிராக்டர் வழங்க முடிவெடுத்து அதன்படி பல்வேறு மாவட்டங்களில் வழங்கப்பட்டு வருகிறது அவ்வகையில், நான்காவது டிராக்டர் மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி கிராமத்தில் சதீஷ் என்ற விவசாயிக்கு இன்று வழங்கப்பட்டது.
இதனை விவசாயி சதீஷ் என்பவருக்கு வழங்கிய ராகவா லாரன்ஸ் அந்த டிராக்டரை கிராமம் முழுவதும் உள்ள அனைத்து ஏழை விவசாயிகளும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். முன்னதாக ராகவா லாரன்ஸூக்கு நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து, அவரோடு சேர்ந்து உற்சாகமாக செல்ஃபி எடுத்துக் கொண்டு, மேடைக்கு அழைத்து வந்தனர். தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 10 டிராக்டர்கள் வழங்க உள்ளதாகவும், விரைவில் விதவைப் பெண்கள் 500 பேருக்கு தையல் இயந்திரங்கள் வழங்க உள்ளதாகவும் ராகவா லாரன்ஸ் தெரிவித்தார்.
விவசாயிகள் பல்வேறு இடங்களில் கடன் சுமையால் தற்கொலை செய்வது கொள்வதாக வரும் செய்திகள் தனக்கு மிகுந்த வேதனையை அளித்ததாகவும் இதனை போக்கும் வகையில் விவசாயிகளுக்கான உபகரணங்கள் வழங்க முடிவு செய்து மாநிலம் முழுவதும் வழங்கி வருவதாகவும் இங்கு வழங்கி உள்ள டிராக்டரை அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அனைவரும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.