நாடு முழுவதும் உள்ள ரசிகர்களின் இதயங்களை வென்ற ஏ.ஆர் ரஹ்மானின் ஆத்மார்த்தமான பாடல் மெஹர்பான் ஓ ரஹ்மான்

J.Durai
வெள்ளி, 22 மார்ச் 2024 (09:12 IST)
சர்வைவல் அட்வென்ச்சர் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய பாலைவனத் திரைப்படமாக உருவாகியுள்ள 'தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்' திரைப்படம் உங்களுக்கு அருகிலுள்ள திரையரங்குகளில் மார்ச் 28, 2024 அன்று இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
 
கடந்த வார இறுதியில் கொச்சியில் படத்தின் இசை வெளியீடு நடந்ததைத் தொடர்ந்து, இந்த வாரம் அதன் இசை ஆல்பத்தை 5 மொழிகளில், அனைத்து ஸ்ட்ரீமிங் தளங்களிலும் படக்குழு வெளியிட்டுள்ளது.
 
ரஹ்மானின் இசை  இணையத்தை ஆட்கொண்டுள்ள நிலையில், படக்குழு சமீபத்தில் ‘மெஹர்பான் ஓ ரஹ்மான்’ இசை வீடியோவை வெளியிட்டது. 
 
இந்த ஆத்மார்த்தமான மெல்லிசையான ‘மெஹர்பான் ஓ ரஹ்மான்’ என்பது அன்பு, நம்பிக்கை, கருணை மற்றும் தெய்வீகத்தன்மை ஆகியவற்றால் நிரப்பப்பட்ட ஒரு பாடல். 
 
இதுதான் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் பிரதிபலித்துள்ளது. இந்தப் பாடலை இசையமைத்து, தயாரித்து, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஒருங்கிணைத்துள்ளார். பிரபல பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி பாடலை அழகாக எழுதியிருக்க, மிகவும் திறமையான ஜித்தின் ராஜ் பாடியுள்ளார்.
 
முடிவில்லாத பாலைவனத்தின் கண்கவர் காட்சிகளுடன், படத்தில் வரும் கதாபாத்திரங்களின் அழகு இவற்றை எல்லாம் கடந்து ஏ.ஆர். ரஹ்மான் ஒவ்வொரு கணத்தையும் தனது இசை மூலம் கடத்தியுள்ளார். இந்தப் பாடல் படத்தின் ஆன்மாவைத் தாங்கி வருகிறது மற்றும் அதன் சாராம்சத்தை ரஹ்மான் தனது இசையமைப்பிலும் சிக்க வைத்துள்ளார்.
 
படத்தின் இசை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் பேசுகையில்:
 
 “பிளெஸ்ஸியின் கண்களில் இருந்த கனவு எனக்கு 'ஆடுஜீவி'தத்தை இன்னும் ஸ்பெஷலாக மாற்றியது. சமரசம் செய்து கொள்ளாத இவரைப் போன்றவர்களால் சில சமயம் திரைப்படம் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.  அவர் திரைப்படத்திற்கு கிட்டத்தட்ட ஒரு தந்தையைப் போல செயல்பட்டார். உண்மையில், இது மிகப்பெரிய விஷயம். 'ஆடுஜீவிதம்' படத்தின் இந்தி வெர்ஷன் எழுதிய பிரசூன் ஜோஷிக்கு நன்றி சொல்கிறேன். ஏனெனில், அவர் படத்தின் ஸ்கிரிப்ட் மற்றும் பிளெஸ்ஸி சார் மீது கொண்ட காதலால் இதற்கு சம்பளம் எதுவும் வாங்கவில்லை. இசையில் திருப்தி இல்லாததால் இந்தப் படத்திற்கு மூன்று முறை இசயமைத்தேன். கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக இந்த இசை மெல்ல வளர்ந்தது. இப்போதிருக்கும் இசையை படக்குழுவினர் அனைவரும் விரும்பினார்கள். இந்தப் படம் நம் எல்லோருக்குமான கதை” என்றார்.
 
தேசிய விருது பெற்ற இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் விஷுவல் ரொமான்ஸ் தயாரித்துள்ள ’தி கோட் லைஃப்’ படத்தில், ஹாலிவுட் நடிகர் ஜிம்மி ஜீன் லூயிஸ், இந்திய நடிகர்களான அமலா பால் மற்றும் கே.ஆர். கோகுல், பிரபல அரபு நடிகர்களான தலிப் அல் பலுஷி மற்றும் ரிக் அபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரவிருக்கும் படத்தின் இசை இயக்கம் மற்றும் ஒலி வடிவமைப்பை அகாடமி விருது வென்ற ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ரசூல் பூக்குட்டி ஆகியோர் செய்துள்ளனர்.
 
படத்தின் பிரமிக்க வைக்கும் காட்சிகளை சுனில் கே.எஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ. ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார். உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் படமாக்கப்பட்ட இப்படம் மலையாளத் திரையுலகில் இதுவரை இல்லாத மிகப்பெரிய முயற்சியாகும். இதன் தயாரிப்பு தரம், கதைசொல்லல் மற்றும் நடிப்புத் திறன் ஆகியவற்றில் புதிய வரையறைகளை அமைத்துள்ளது. சிறந்த திரையரங்க அனுபவத்தை பார்வையாளர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் கொடுக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்