சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கிறதா பாஜக?

வெ.சுரேஷ் வெங்கடாச்சலம்
புதன், 9 மார்ச் 2016 (10:47 IST)
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன.


 


இந்த தேர்தலில் தேமுதிக எந்த கூட்டணிக்குச் செல்லும் என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பை மக்கள் நாள்தோறும் எதிர்பார்த்து வருகின்றனர்.
 
இந்நிலையில், திமுக-தேமுதிக கூட்டணி முடிவாகி விட்டதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தொடர்ந்து கருத்துக்கள் பரவி வருகின்றன.
 
அத்துடன் இம்மாதம் 11 ஆம் தேதி விஜயகாந்த் திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பார் என்றும், அதைத் தொடர்ந்து இந்த கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது.
 
இதனால், விஜயகாந்தின் வருகைக்காக காத்திருந்த பாஜக பெரிதும் ஏமாற்றம் அடைந்திருப்பதாகவும் தனது அடுத்த வியூகத்தை வகுத்து வருவதாக கூறப்படுகின்றது.
 
அதன்படி, தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இணைவதற்காக பாஜக முயன்று வருவதாகவும் அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


 

 
தமிழகத்தைப் பொறுத்தவரையில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் கூட்டணி பலமானதாகவும் ஆட்சியமைக்கும் நிலையிலும் இருந்து வருகின்றது.
 
இந்நிலையில், தேமுதிகவுடன் இணைந்து தங்கள் கட்சியின் செல்வாக்கை தமிழகத்தில் அதிகரிப்பதற்கான திட்டத்தில் பாஜக தோல்வியடைந்துள்ளது.
 
இதனால், தங்களது நட்பு கட்சியாக இருந்து வரும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலை சந்திக்க பாஜக திட்டட்டிருப்பதாக கூறப்படுகின்றது.
 
அதன்படி, தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் தமிழகம் வரவுள்ளனர்.


 


அப்போது, தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவை அமித் ஷா சந்திப்பார் என்றும், கூட்டணி குறித்தும் அப்போது பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் கூற்ப்படுகின்றது.

இது தொடர்பான அதிகாரப் பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளிவராத நிலையில், பாஜக தலைவரின் வருகைவரையில் நாமும் காத்திருப்போம்.